கோட்டாபய- மஹிந்த அரசாங்க உடனடியாக பதவி விலக வேண்டும்!
வெளிநாட்டுக் கப்பலினால் ஸ்ரீலங்கா கடல் வளத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பினை தடுக்கமுடியாத கோட்டாபய-மஹிந்த தலைமையிலான ஸ்ரீலங்கா அரசாங்கம் உடனடியாக பதவிவிலக வேண்டுமென ஐக்கிய சக்தி வலியுறுத்தியுள்ளது.
வெறும் நட்டஈட்டினைப் பெற்று இந்த பாதிப்புக்களை ஈடுசெய்ய முடியாதென்று அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான கபீர் ஹாஷிம் கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது தெரிவித்தார்.
இதுதொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
சர்வதேச நாடுகளில் தொடருந்து விபத்தில் சிக்கினாலே போக்குவரத்து அமைச்சர்கள் பதவி விலகுகின்றார்கள். என்றாலும், இதுவரை கப்பல் விபத்திற்கு ஸ்ரீலங்கா அரசாங்கம் பொறுப்புகூறலை அறிவிக்கத் தவறியதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் கப்பல் மூழ்கினாலும் கவலையில்லை என்று சிங்களத்தில் அதிகமாக கூறும் கதையொன்று இருக்கின்றது. இதுபோலவே ஸ்ரீலங்காவில் நடந்துள்ளது. துறைமுக அதிகாரியின் அனுமதியின் பேரில்தான் எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் ஸ்ரீலங்கா கடற்பிரதேசத்தில் பிரவேசித்ததாக தற்போதும் பேசப்படுகின்றது.
சில நாடுகளில் தொடருந்து தடம்புரண்டாலேயே அந்த நாட்டின் போக்குவரத்து அமைச்சர் பதவியிலிருந்து விலகிவிடுவார். இதுவரை யார் இந்த கப்பலை ஸ்ரீலங்கா கடற்பிரதேசத்தில் அனுமதித்தது? கப்பலில் ஏற்பட்ட தீயைக் கட்டுப்படுத்த தொழில்நுட்பங்கள் இருக்கின்றதா? அதனை அறிந்தும் யார் இந்த கப்பலை அனுமதித்தது? ஆகவே இந்த அரசாங்கமே இதற்கான பொறுப்பினை ஏற்று ஆட்சியிலிருந்து விலகிவிட வேண்டும்.
இந்தக் கப்பலினால் ஏற்பட்ட பாதிப்பு, கடல்வளங்களுக்கு ஏற்பட்ட தாக்கத்தை நட்டஈடு என்று கூறி ஆறுதலடைந்துவிட முடியாது. இந்தக் கப்பலினால் ஏற்பட்ட நட்டம் குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கையில் பலவீனம் உள்ளது.
தேசிய பாதுகாப்பை அடிக்கடி நினைவுப்படுத்துகின்ற இந்த அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்கத்தவறியதால் அரசாங்கம் மீதான நம்பிக்கை இன்று இழக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு தேவைப்படுகின்ற கொரோனா தடுப்பூசியை அரசாங்கம் உரிய வகையில் இறக்குமதி செய்யவில்லை.
உரமானியமும் விவசாயிகளுக்கு இல்லை. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நட்டஈடும் இல்லை. ஆகவே அனைத்திலும் தோல்வியடைந்துள்ள இந்த அரசாங்கம் உடனடியாக பதவிவிலக வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.