இஸ்ரேலிய பணய கைதிகளில் 3 பேரை விடுதலை செய்யும் ஹமாஸ் : வெளியான அறிவிப்பு
இஸ்ரேலிய (Israel) பணய கைதிகளில் மேலும் 3 பேரை இன்று (08.02.2025) விடுதலை செய்யவுள்ளதாக ஹமாஸ் (Hamas) அறிவித்துள்ளது.
இஸ்ரேல் மற்றும் காஸாவின் (Gaza) ஹமாஸ் அமைப்பு இடையிலான போர் 15 மாதத்துக்குப் பிறகு முடிவுக்கு வந்துள்ளது.
கடந்த 2023-ம் ஆண்டு இஸ்ரேலுக்குள் புகுந்து ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தி 250-க்கும் மேற்பட்டோரை பிணைக் கைதிகளாகப் பிடித்துச்சென்றனர்.
போர் நிறுத்த ஒப்பந்தம்
கட்டார், எகிப்து, அமெரிக்கா ஆகிய நாடுகளின் மத்தியஸ்தத்தால் இருதரப்புக்கும் இடையே ஏற்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் சமீபத்தில் நடைமுறைக்கு வந்தது.
அதன்பின், தற்காலிக போர் நிறுத்தத்தின்போது 120-க்கும் மேற்பட்ட பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர். ஹமாஸ் அமைப்பினரிடம் இன்னும் 94 பிணைக் கைதிகள் உள்ளனர்.
பிணைக்கைதிகள்
இந்நிலையில், மேலும் விடுவிக்கப்பட உள்ள 3 பிணைக்கைதிகளின் பெயர் பட்டியலை ஹமாஸ் அமைப்பு வெளியிட்டுள்ளது.
அதன்படி ஒஹட் பென் அமி, இலி ஷராபி, ஆர் லிவி ஆகிய 3 பேரை இன்று விடுதலை செய்வதாக ஹமாஸ் தெரிவித்தது.
இந்த 3 பேருக்கு ஈடாக தங்கள் நாட்டு சிறையில் உள்ள பலஸ்தீனியர்களில் 183 பேரை இஸ்ரேல் விடுதலை செய்கிறது.
போர் நிறுத்தம் நடைமுறையில் உள்ள நிலையில் இதுவரை இஸ்ரேலிய பிணைக்கைதிகளில் 18 பேரை ஹமாஸ் விடுதலை செய்துள்ளது.
அதற்கு ஈடாக தற்போதுவரை 300-க்கும் மேற்பட்ட பலஸ்தீனிய கைதிகளை இஸ்ரேல் விடுதலை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |