பெரிய வெங்காய விவசாயிகளுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்
பெரிய வெங்காய உற்பத்தியை அதிகரிப்பது மற்றும் விலை நிர்ணய பொறிமுறை குறித்து அரசாங்கத்தினால் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
உள்ளூர் பெரிய வெங்காய விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான முறையான வேலைத்திட்டத்தை உருவாக்குவது குறித்து விவசாயிகளுடனான கலந்துரையாடல் நேற்று (17) காலை ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
குறித்த கலந்துரையாடல் விவசாயம், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால்காந்த மற்றும் வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.
விவசாயிகளின் பிரச்சினை
இந்த கலந்துரையாடலின் போதே மேற்படி விடயம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இதில் கருத்து தெரிவித்த கே.டி. லால்காந்த, உள்ளூர் பெரிய வெங்காய விவசாயிகளின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக அரசாங்கமென்ற வகையில் ஒரு குறிப்பிட்ட திட்டம் தயாரிக்கப்படுவது இதுவே முதல் முறை என அவர் தெரிவித்துள்ளார்.
பெரிய வெங்காய விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு முன்னுரிமை அளிக்கும் அதே வேளை, நுகர்வோருக்கு கொள்வனவு செய்யக் கூடிய விலைக்கு வெங்காயத்தைப் பெறுவதற்கான வாய்ப்பை வழங்குவதன் அவசியம் குறித்து இங்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.
வெங்காய உற்பத்தி
பெரிய வெங்காய உற்பத்தியை அதிகரிப்பது மற்றும் விலை நிர்ணய பொறிமுறை குறித்து இதன் போது பரவலாக ஆராயப்பட்டுள்ளது.

உள்ளூர் பெரிய வெங்காய பயிற்செய்கை தொடர்பான நிலையான உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்தலுக்கான மூலோபாயங்கள் மற்றும் நடவடிக்கைகள் தொடர்பில் விவாசாயத் திணைக்களத்தினால் தயாரிக்கப்பட்ட அறிக்கையும் இங்கு முன்வைக்கப்பட்டுள்ளது.
விவசாயிக்கு அநீதி ஏற்படாத வகையில் பெரிய வெங்காயத்திற்கு நிலையான விலையை நிர்ணயிக்க அரசாங்கம் முடிவு செய்திருப்பதாக இங்கு சுட்டிக்காட்டப்பட்டதோடு, களஞ்சியம் உட்பட விவசாயிகளின் வசதிகளை விரிவுபடுத்த எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் குறித்து முக்கியமாக ஆராயப்பட்டுள்ளது.
ஏற்ற இறக்கங்கள்
அதிக இடைவெளியுடன் கூடிய விலை ஏற்ற இறக்கங்கள் தாங்கள் எதிர்கொள்ளும் ஒரு பாரிய பிரச்சினை என்றும், அந்த ஆபத்தை எதிர்கொண்ட நிலையிலே தாம் பயிற்செய்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் விவசாயிகள் சுட்டிக்காட்டினர்.

அத்தோடு, அதிக வருமானம் ஈட்டக்கூடிய ஒரு துறையான பெரிய வெங்காய பயிற்செய்கையில் தொடர்ந்து ஈடுபட தேவையான வசதிகளை வழங்குமாறு அரசாங்கத்திடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
அவசர நிலைமைகளில் தேவையான தலையீடுகளை மேற்கொள்வதற்கு வாய்ப்பாக கமநல அபிவிருத்தித் திணைக்களத்தின் கீழ் பதிவு செய்யுமாறு அனைத்து விவசாயிகளிடமும் அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மத்தள விமான நிலையத்தை குறி வைக்கும் அமெரிக்கா 5 நாட்கள் முன்