ஓய்வூதியத் திட்டம் - கடற்றொழிலாளர்களுக்கு அரசின் மகிழ்ச்சித் தகவல்
கடற்றொழிலாளர்களுக்கான ஓய்வூதியத் திட்டம் நவம்பர் 21 ஆம் திகதி அறிமுகப்படுத்தப்படும் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் (Ramalingam Chandrasekar) தெரிவித்துள்ளார்.
கொழும்பு (Colombo) தாமரை கோபுரத்தில் திங்கட்கிழமை (17) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், நவம்பர் 21 ஆம் திகதி முதல் 23 ஆம் திகதி வரை கொழும்பில் உள்ள தாமரை கோபுர வளாகத்தில் காலை 10.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை 'அக்வா பிளானட் ஸ்ரீ லங்கா 2025 சர்வதேசக் கண்காட்சி' ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பார்வையிட அனுமதி இலவசம்
எமது நாட்டில் உள்ள மீன் வளத்தின் முக்கியத்துவத்தை மக்களுக்கு எடுத்துக்காட்டும் நோக்கத்தில் இந்த கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த கண்காட்சியை பார்வையிட அனுமதி இலவசமாகும். சர்வதேச ரீதியாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த கண்காட்சியில் மிகவும் விலையுயர்ந்த மற்றும் அரிய வகை மீன்களை மக்கள் பார்வையிட முடியும். நாட்டின் நீரியல் துறையை அபிவிருத்தி செய்வதற்கும் மீன்பிடித்துறையை மேம்படுத்துவதற்கும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் எடுக்கும் முயற்சியின் ஒரு பங்காக இந்த கண்காட்சி உள்ளது.
அத்துடன், மீன்பிடித்துறையையும் நீரியல் வளத்தையும் பாதுகாப்பது மிகவும் அவசியமாகும். மீன்பிடித் தொழிலை மேம்படுத்தும் நோக்கத்தில் கடற்றொழிலாளர்களுக்கான ஓய்வூதியத் திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
சர்வதேச கடற்றொழிலாளர் தினத்தை முன்னிட்டு நவம்பர் 21 ஆம் திகதி கடற்றொழிலாளர்களுக்கான ஓய்வூதியத் திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது என அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மத்தள விமான நிலையத்தை குறி வைக்கும் அமெரிக்கா 4 நாட்கள் முன்