அரசை விமர்சித்தால் மறுநாள் சீஐடி விசாரணை - ஹரின் பெர்ணான்டோ கடும் தாக்கு
சிறிலங்கா அரசாங்கத்தை விமர்சிக்கும் அனைவரையும் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைப்பது வழமையான விடயமாக மாறியுள்ளதாக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக கருத்து வெளியிட்ட ஷெஹான் மாலக கமகே என்ற இளைஞர் கடந்த 8 நாட்களாக தொடர்ச்சியாக குற்றப்புலனாய்வுப் பிரிவிற்கு அழைத்து விசாரணைக்கு உட்படுத்தப்படுவதாக கூறியுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
இன்று நாட்டில் இதுவரை இல்லை அல்லது முடியாது என்பதை தவிர வேறு எதையாவது நாம் கேட்டிருக்கின்றோமா? ஆகவே இந்த அரசாங்கத்திற்கு இன்று இல்லை மற்றும் முடியாது என்பதை தவிர வேறு எதையுமே செய்ய முடியவில்லை என்பது தெளிவாக பார்க்கக்கூடியதாகவுள்ளது.
அமைச்சர் ஒருவர் கொவிட் தொற்றுக்குள்ளாகி குணமடைந்து வெளியே வந்து இது அனைத்திற்கும் எதிர்க்கட்சியினர் தான் காரணம் என்று கூறியிருந்தார், நகைச்சுவையாக உள்ளது.
நாங்களா சரியான நேரத்திற்கு தடுப்பூசிகளை கொண்டுவராமல் இருந்தோம், நாங்கள் சரியான தேரத்திற்கு நாட்டை முடக்கலாம் என இருந்தோம்? ஆர்ப்பாட்டங்கள் தான் இதற்கு காரணமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த இடத்தில தெளிவாக ஒரு விடயத்தை கூறவேண்டும், கொவிட் பிரச்சினையின் பின்னர் ஐக்கிய மக்கள் சக்தியினர் தனி தனியாக அவதானத்தோடு செயற்பட்டோம், நாம் என்றும் கட்சி ஆதரவாளர்களை அழைக்கவில்லை. நாங்கள் மக்களுக்காகவே தனியாக வீதிக்கு இறங்கி போராடினோம்.
ஆகவே அந்த அமைச்சருக்கு நான் கூறிக்கொள்கிறேன் உங்களுடைய தவறுகளை மறைக்க ஒருவருக்கொருவர் விரல் நீட்டுவதை இனியாவது தவிர்த்து கொள்ளுங்கள்.
ஆசிரியர்கள் தமது கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டங்கள் செய்தார்கள், அவர்கள் பேச்சுவார்த்தைக்கு கேட்டபோது நீங்கள் செவி சாய்த்தீர்களா? அவர்களது கருத்துக்களை கேட்டீர்களா? அவர்களுடன் கலந்துரையாடினீர்களா? எதுவும் இல்லை - இதனால் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.
இந்த அரசாங்கத்தில் பெரியவர் முதல் அனைவருமே தோல்வியடைந்து விட்டனர். இன்று யாராவது ஒருவர் அரசாங்கத்திற்கு எதிராக விமர்சித்து பேசினால் மறுநாள் அவர் குற்ற புலனாய்வு பிரிவில் இருக்கின்றார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக கருத்து வெளியிட்ட ஷெஹான் என்ற சகோதரர் எட்டாவது நாளாகவும் குற்றப் புலனாய்வு பிரிவிற்கு அழைக்கபட்டுள்ளார். அவர்களை விசாரணை செய்து அவர்கள் வாய்மூலமாக எம்மை பற்றி ஏதாவது தகவல் பெற்று, எம்மை கைது செய்யவே இவர்கள் முயற்சிக்கிறார்கள் என்றார்.