பெண் என்பதால் விமர்சனத்திற்குள்ளாகும் பிரதமர் ஹரிணி : அமைச்சர் லால்காந்த குற்றச்சாட்டு
கல்வி மறுசீரமைப்பு தொடர்பாக பிரதமர் ஹரிணி அமரசூரிய முன்னெடுத்து வரும் வேலைத்திட்டங்களை சில தரப்பினர் கடுமையாக விமர்சிப்பதற்குக் காரணம் அவர் ஒரு பெண்ணாக இருப்பதே என்று விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால் காந்த தெரிவித்துள்ளார்.
நிகழ்வொன்றில் உரையாற்றிய அமைச்சர், இந்த விமர்சனங்களுக்குப் பின்னால் சில மத நிறுவனங்களின் செல்வாக்கு மற்றும் பெண்களுக்கு எதிரான காழ்ப்புணர்ச்சி மறைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஜனாதிபதிக்கு அடுத்த நிலையிலுள்ளவர்
“ஜனாதிபதிக்கு அடுத்தபடியாக அரசாங்கத்தின் இரண்டாம் நிலைத் தலைமைத்துவத்தின் மீது தாக்குதல் நடத்துவது எதிர்க்கட்சியின் அரசியல் தந்திரோபாயமாக மாறியுள்ளது. குறிப்பாக பிரதமரைக் குறிவைத்து நடத்தப்படும் இந்தத் தாக்குதல்களுக்குப் பின்னால் அரசியல் நோக்கங்களே உள்ளனவே தவிர, கொள்கை ரீதியான விடயங்கள் அல்ல” என அவர் குறிப்பிட்டார்.

எதிர்க்கட்சியில் இருப்பது எளிது என்றும் அரசாங்கத்தை நடத்துவது கடினம் என்றும் நிலவும் கருத்தை நிராகரித்த அமைச்சர், தங்களைப் பொறுத்தவரை எதிர்க்கட்சி அரசியலே மிகவும் கடினமானது எனக் குறிப்பிட்டார்.
அரசாங்கத்தை நடத்துவது ஒரு ‘பெரிய விடயமே’ அல்ல
“அரசாங்கத்தை நடத்துவது கடினம் என்று சிலர் கூறுகிறார்கள். ஆனால் உண்மை நிலை அதுவல்ல. எங்களைப் பொறுத்தவரை அரசாங்கத்தை நடத்துவது ஒரு ‘பெரிய விடயமே’ அல்ல . அதைவிட எதிர்க்கட்சி அரசியலில் ஈடுபடுவதே கடினமாக இருந்தது” என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |