முன்னாள் குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு சிறைத்தண்டனை : நீதிமன்றம் உத்தரவு
முன்னாள் குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் ஹர்ஷ இலுக்பிட்டியவுக்கு (Harsha Ilukpitiya) உயர் நீதிமன்றம் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் அவருக்கு எதிராக நீதிமன்றம் இன்று (23) இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
ஹர்ஷ இலுக்பிட்டிய தனது செயல்கள் மூலம் நீதித்துறைக்கு எதிராக கடுமையான அவமதிப்புச் செயலைச் செய்ததாக தீர்ப்பை வழங்கும் போது நீதிபதி கோடகொட சுட்டிக்காட்டினார்.
நீதிமன்ற அவமதிப்பு
முந்தைய அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில், மின்னணு விசா வழங்கும் செயல்முறையை இரண்டு தனியார் நிறுவனங்களுக்கு அவுட்சோர்ஸ் செய்யும் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
பின்னர், உயர் நீதிமன்றம் இந்த நடவடிக்கையை நிறுத்தி இடைக்காலத் தடை உத்தரவைப் பிறப்பித்ததுடன் முந்தைய விசா வழங்கும் நடைமுறையை மீண்டும் தொடங்குமாறு உத்தரவிட்டது.
இந்த நீதிமன்ற உத்தரவை மீறி, ஹர்ஷ இலுக்பிட்டிய தடை உத்தரவைப் பின்பற்றத் தவறிவிட்டதாகவும், நீதிமன்றத்தின் உத்தரவுக்கு மாறாக தொடர்ந்து செயற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதன் விளைவாக, நீதிமன்ற அவமதிப்புக்காக அவர் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட நிலையில் அவரது செயல்கள் உயர் நீதிமன்றத்தின் அதிகாரத்தை வேண்டுமென்றே புறக்கணித்ததாக நீதிமன்றம் தீர்மானித்ததனால் அவருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
