ஒரே நாளில் கண்டுபிடிக்கப்பட்ட அதிகூடிய போதைப்பொருள் தொகை: வெளியாகும் அதிர்ச்சி தகவல்
தங்காலை பிரதேசத்தில் வைத்து காவல்துறையினரால் நேற்று (22) கண்டுபிடிக்கப்பட்ட போதைப்பொருள் தொகை வெளிநாட்டிலிருந்து போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் “உனாகுராவே சாந்த” என்பவருக்கு சொந்தமானவை என காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குறித்த போதைப்பொருள் தொகையின் மொத்த பெறுமதி 9,888 மில்லியன் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, கண்டுபிடிக்கப்பட்ட போதைப்பொருட்களில் 284.94 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 420.976 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருள் தொகையுடன் மொத்தமாக 705.91 கிலோகிராம் போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
அதிகூடிய போதைப்பொள் தொகை
குறித்த போதைப்பொருள் தொகையை கண்டுபிடித்த லொரிகளின் உரிமையாளர்கள் தற்போது கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகின்றனர்.
தங்காலை சீனிமோதர பிரதேசத்தில் வீடொன்றினுள் இருந்து மூன்று பேர் மர்மமான முறையில் உயிரிழந்து காணப்பட்டதையடுத்து காவல்துறையினருக்கு வழங்கப்பட்ட தகவல்களுக்கமைய மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளில் மூன்று லொரிகளில் மறைத்து வைக்கப்பட்ட ஐஸ் மற்றும் ஹெரோயின் உள்ளிட்ட போதைப்பொருள் தொகை நேற்று (22) கண்டுபிடிக்கப்பட்டது.
குறித்த போதைப்பொருள் தொகை நாளொன்றினுள் கண்டுபிடிக்கப்பட்ட அதிகூடிய போதைப்பொள் தொகை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
ஆயுதங்களும் பறிமுதல்
அதன்படி, இந்த சோதனை நடவடிக்கையில் போதைப்பொருட்களுக்கு மேலதிகமாக T-56 ரக துப்பாக்கி மற்றும் பிஸ்டல் ரக துப்பாக்கிகள் 5 காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டன.
தங்காலை சீனிமோதர பிரதேசத்தில் வீடொன்றினுள் மர்மமான முறையில் உயிரிழந்து காணப்பட்ட மூன்று நபர்களும் போதைப்பொருள் விநியோக வலையமைப்பில் ஈடுபட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
மூவரும் போதைப்பொருட்களில் காணப்பட்ட இரசாயனத் திரவியத்தை சுவாசித்தமையால் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
உயிரிழந்த நபர்களின் பிரேத பரிசோதனை இன்று (23) மேற்கொள்ளப்படவுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தொடரும் கைதுகள்
இந்த போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலும் தொடர்புடைய போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்ட லொரியின் சாரதி மற்றும் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, லொரி ஒன்றின் உரிமையாளர் என சந்தேகிக்கப்படும் இளைஞர் ஒருவர் இன்று (23) காலை எல்பிட்டிய வல்பகலவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகத்தின் பேரில் விசாரணைகளை மேற்கொள்ள குறித்த நபரை கைது செய்ததாக எல்பிட்டிய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த கடத்தலில் ஈடுபட்ட மேலும் பல சந்தேகநபர்களை கைது செய்ய காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
