இலங்கையில் 5000 தகவல் தொழில்நுட்ப வேலை வாய்ப்புகளுக்கான சந்தர்ப்பம்
5000 தகவல் தொழில்நுட்ப பொறியியலாளர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்க HCL நிறுவனம் தீர்மானித்துள்ளது.
அண்மையில் இந்தியாவிற்கு விஜயம் செய்த கிழக்கு மாகாண ஆளுநர் கெளரவ செந்தில் தொண்டமான் இந்தியாவின் பிரபல தகவல் தொழில்நுட்ப நிறுவனமான HCL லிமிடெட் உடன் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடலின் பயனாக மேற்கண்ட முடிவு எட்டப்பட்டுள்ளது.
புதுடெல்லியில் HCL லிமிடெட் நிறுவனத்தின் மூத்த நிர்வாகிகளை சந்தித்து ஆளுநர் செந்தில் தொண்டமான் கலந்துரையாடல்களை நிகழ்த்தினார். இதன் போதே சிறிலங்காவில் 5000 தகவல் தொழில்நுட்ப துறை திறமையாளர்களுக்கு வேலைவாய்ப்பு வசதிகளை வழங்குவது தொடர்பாக கலந்துரையாடல்கள் நிகழ்த்தப்பட்டது.
HCL நிறுவனம் செயற்பாடுகளை விரிவுபடுத்தும்
இது HCL லிமிடெட் நிறுவனத்தின் மத்தியில் பெரும் வரவேற்ப்பினை பெற்றது மாத்திரமல்லாமல், HCL லிமிடெட் நிறுவனம் சிறிலங்காவில் அவர்களின் செயற்பாடுகளை விரிவுபடுத்துவதற்கான உறுதியையும் வழங்கியுள்ளது.
உலகளாவிய ரீதியில் புகழ்பெற்ற தகவல் தொழில்நுட்ப சேவை வழங்குநரான HCL லிமிடெட், சிறிலங்காவில் தமது நிறுவனத்தை விரிவாக்கம் செய்வதற்கு விருப்பம் தெரிவித்துள்ளமையானது சிறிலங்காவின் வரலாற்றில் தகவல் தொழில்நுட்ப துறையில் இடம்பெற்ற மிகப்பெரிய முதலீடாக அமைந்துள்ளது என்பதில் எதுவித ஐயமும் இல்லை.
விரைவில் HCL லிமிடெட், முதலீட்டுச் சபையுடன் (BOI) உடன்படிக்கையில் கையெழுத்திடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
முதலீட்டுச் சபையின் (BOI) தலைவர் தினேஷ் வீரக்கொடியின் ஆலோசனையின் பேரில் இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.