பாடசாலை மாணவர்களுக்கு சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள விசேட தகவல்!
கடுமையான வெப்பநிலை உள்ளிட்ட காலநிலை மாற்றங்களில் பாடசாலை மாணவர்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டல்களை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது.
இது தொடர்பான வழிகாட்டுதல்களை உள்ளடக்கிய அறிக்கை கல்வி அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதிக வெப்பநிலையுடன் கூடிய காலநிலை நிலவுவதால் பாதகமான விளைவுகள் ஏற்படக்கூடும் எனவும், இது தொடர்பில் அவதானத்துடன் இருக்குமாறும் பாடசாலை அதிபர்களுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
அறிவுறுத்தல்கள்
இந்த காலநிலை மாற்றத்தினால் வியர்வை, அதிக உடல் உழைப்பு, பக்கவாதம், நீர்ப்போக்கு மற்றும் உமிழ்நீர் வெளியேறும் நிலைமைகள் அதிகரித்துள்ளமை பாரதூரமான நிலையாகும் என சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, கடும் வெப்பம் நிலவும் நாட்களில் மாணவர்கள் வெளிப்புற அல்லது விளையாட்டு மைதானத்தில் நிற்பதை தவிர்க்க வேண்டும் எனவும், மாணவர்கள் கடுமையான வெயில் உள்ளபோது வெளியில் நேரத்தை செலவிடுவதையும், விளையாட்டுகளை விளையாடுவதையும் தவிர்க்க வேண்டும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மாணவர்கள் தண்ணீர் அருந்த வேண்டும், களைப்பை போக்க சிறிய ஓய்வினை அடிக்கடி எடுத்துக்கொள்ள வேண்டும் எனவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த சுகாதார நடைமுறைகளை உள்ளடக்கிய அறிவுறுத்தல்கள் அனைத்து பாடசாலைகளின் அதிபர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.