மக்களே அவதானம் - கடும் மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை
நாட்டின் பல மாவட்டங்களுக்கு பலத்த இடி மின்னல் தொடர்பான அம்பர் எச்சரிக்கை அறிவித்தலை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
இன்று (09) காலை 11.00 மணிக்கு விடுக்கப்பட்ட இந்த எச்சரிக்கை, நாளை (10) அதிகாலை 1.00 மணி வரை நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேல், சபரகமுவ, மத்திய, ஊவா, வடமேல் மற்றும் தென் மாகாணங்கள் உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அம்பர் எச்சரிக்கை விடுத்துள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை
அனுராதபுரம் மற்றும் மன்னார் மாவட்டங்களுக்கும் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதிகளில் பல இடங்களில் கடுமையான மின்னலுடன் கூடிய இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்பதுடன், இடியுடன் கூடிய மழையின்போது சில பகுதிகளில் தற்காலிகமாகப் பலத்த காற்றும் வீசக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, மின்னல் தாக்கத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைப்பதற்குப் பொதுமக்கள் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இடியுடன் கூடிய மழையின் போது திறந்த வெளிகள், நெல் வயல்கள், தேயிலைத் தோட்டங்கள் அல்லது நீர்நிலைகளில் தங்கியிருப்பதைத் தவிர்க்கவும். மரங்களின் கீழ் தஞ்சம் அடைவதைத் தவிர்த்து, பாதுகாப்பான கட்டிடங்களுக்குள் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |