வலுவடையவுள்ள காற்றழுத்த தாழ்வு! இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
நாட்டில் இன்று முதல் அடுத்த சில நாட்களுக்கு வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் நிலவும் மழை நிலைமைகளில் அதிகரிப்பு எதிர்பார்க்கப்படுகின்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று (25.11.2025) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
தீவின் பெரும்பாலான பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் அத்தோடு வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பலத்த காற்று
பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு நாட்டின் பிற பகுதிகளில் 100 மில்லி மீட்டருக்கும் அதிகமான மழை பெய்யக்கூடும் அத்தோடு தீவின் பிற பகுதிகளில் சில இடங்களில் 75 மில்லி மீட்டருக்கும் அதிகமான கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாணத்திலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணிக்கு 40 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கத்தால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும், இலங்கையின் தென் மேற்கிலும் தென்கிழக்கிலும் காணப்படும் காற்றுச் சுழற்சிகள் முறையே கிழக்கு மற்றும் மேற்கு நோக்கி நகர்ந்து நாளை மறு தினம் (26.11.2025) ஒன்றாக இணைந்து காற்றழுத்த தாழ்வு நிலையாக வலுப்பெறவுள்ளதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் தெரிவித்துள்ளார்.
காற்றழுத்த தாழ்வு
தெற்கு நோக்கி, ஆரம்பத்தில் முழுவதும் இலங்கை நிலப்பகுதியூடாக நகர்ந்து பின்னர் இலங்கையின் கிழக்கு கரையில் அரைவாசிப்பகுதி நிலப்பகுதியிலும் அரைவாசிப்பகுதி கடற்பகுதியுமாக நகர்ந்து எதிர்வரும் 27.11.2025 அன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தொடர்ந்து கிழக்கு கரையோரமாக நகர்ந்து வடக்கு மாகாணத்தினை அண்மித்து, எதிர்வரும் 30.11.2025 அன்று வடமாகாணத்தில் இருந்து நீங்கி மேலும் வடக்கு திசையில் நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது எனவும் கூறியுள்ளார்.
இத தொடர்பில் அவர் வெளியிட்ட அறிக்கையில்,
நாளை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட்ட நாட்டின் பல பகுதிகளில் கனமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
அதே வேளை எதிர்வரும் 26.11.2025 முதல் 29.11.2025 வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் அத்துடன் மேற்கு, தெற்கு, மத்திய, சபரகமுவா, ஊவா, வடமத்திய மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் மிகக் கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
எதிர்வரும் 26.11.2025 முதல் கிழக்கு தெற்கு, மேற்கு, மத்திய, சபரகமுவா மற்றும் ஊவா மாகாணங்களில் காற்று மணிக்கு 50-70 கி.மீ. வேகத்தில் வீசும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேவேளை எதிர்வரும் 27.11.2025 முதல் வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் காற்றின் வேகம் மணிக்கு 50-70 கி.மீ. வேகத்தில் வீசும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தெற்கு, மேற்கு, சப்ரகமுவ, மத்திய, ஊவா மாகாணத்தில் ஏற்கெனவே பல ஆறுகள் அவற்றின் கொள்ளளவை தாண்டி பாய்ந்து கொண்டிருக்கின்றன. பல இடங்களில் வெள்ள அனர்த்தங்கள் ஏற்பட்டுள்ளன. அதேவேளை மிகப்பெரும் கன மழை எதிர்வரும் நாட்களிலும் கிடைக்கவுள்ளன.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கடந்த சில நாட்களாக கிடைத்து வருகின்ற கன மழை காரணமாக நிலம் நிரம்பியுள்ளது. அதேவேளை மிகப்பெரும் கன மழை எதிர்வரும் நாட்களிலும் கிடைக்கவுள்ளன” என சுட்டிக்காட்டியுள்ளார்.
செய்தி - எரிமலை
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |