கிரீஸ் நாட்டில் காட்டுத்தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட இரண்டு உலங்குவானூர்திகள் விபத்து
கிரீஸ் நாட்டில் ஏதென்ஸுக்கு மேற்கே காட்டுத்தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு உலங்குவானூர்திகள் விபத்துக்குள்ளானதாக தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.
இந்தச் சம்பவம் அட்டிகாவின் சத்தா பகுதியின் பரந்த நிலப்பரப்பில் நிகழ்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது
வாடகைக்கு அமர்த்தப்பட்ட உலங்கு வானூர்திகள்
இந்த உலங்குவானூர்திகள் தீயணைப்புத் துறையால் வாடகைக்கு எடுக்கப்பட்டவை என்றும், ஒவ்வொன்றிலும் இரண்டு பேர் கொண்ட குழுவினர் இருந்தனர் என்றும், அவை எலெப்சினா இராணுவ விமான நிலையத்திலிருந்து புறப்பட்டன என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
வேகமாக பரவிவரும் காட்டுதீயால் வெளியேற்றப்படும் மக்கள்
இதேவேளை கிரீஸின் பிரதான நிலப்பகுதிகள் மற்றும் சுற்றுலாத் தலங்கள் உட்பட பல பகுதிகளில் காட்டுத்தீ வேகமாக பரவி வருவதால், ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

கிரீட் தீவில், தீ ஆயிரக்கணக்கான ஹெக்டேர் நிலத்தை எரித்து, 8,000 மக்களைத் தற்காலிகமாக வெளியேற்றத் தூண்டியுள்ளது.
வெள்ளிக்கிழமையன்று மத்திய கிரீஸில், பெரும்பாலும் சுற்றுலாப் பயணிகளான சுமார் 500 பேரும் வெளியேற்றப்பட்டனர். பாரோஸ், ஆண்ட்ரோஸ் மற்றும் கலிம்னோஸ் தீவுகளிலும் தீ பரவியுள்ளது.
தொடர்ச்சியான வெப்ப அலைகள் காட்டுத்தீ பரவுவதற்குச் சாதகமான சூழலை உருவாக்கியதைத் தொடர்ந்து, பேரழிவை ஏற்படுத்தும் காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டுள்ள பல ஐரோப்பிய நாடுகளில் கிரீஸும் ஒன்றாகும்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |