கொரோனா தடுப்பூசி பொதுமக்களுக்கு எப்போது? வைத்தியர் ஹேமந்த ஹேரத் விளக்கம்
இந்தியாவிடம் இருந்து இரண்டாம் கட்டமாக பெற்றுக்கொள்ளவுள்ள ஒக்ஸ்போர்ட் -அஸ்ட்ரசெனிகா கொரோனா தடுப்பூசிகளை அடுத்த மூன்று வாரங்களில் இலங்கைக்கு கொண்டுவரவுள்ளதாக சுகாதார பணியகத்தின் பிரதி சுகாதார பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். சீனாவின் தடுப்பூசிகளும் அதே காலகட்டத்தில் வருவதனால் பொதுமக்களுக்கு இவற்றை பயன்படுத்த முன்னாயத்த ஏற்பாடுகள் செய்யப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் இருந்து நேற்று கொண்டுவரப்பட்ட ஒக்ஸ்போர்ட் -அஸ்ட்ரசெனிகா கொரோனா தடுப்பூசிகளை ஆறு வைத்தியசாலைகளில் பயன்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட நிலையில் அடுத்த மூன்று தினங்களில் இந்த தடுப்பூசிகளை ஏற்றிக்கொள்வதற்கான நாட்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. எனினும் முதல் கட்டமாக 5 லட்சம் தடுப்பூசிகளை இலங்கையில் பயன்படுத்தவே வாய்ப்புகள் கிடைத்துள்ள காரணத்தினால் மக்களுக்கு இவற்றை ஏற்றிக்கொள்ள இன்னமும் அனுமதி வழங்கப்படவில்லை.
இந்நிலையில், இந்தியாவில் இருந்து இரண்டாம் கட்டமாக மேலும் ஐந்து இலட்சம் அல்லது அதற்கும் சற்று அதிகமான ஒக்ஸ்போர்ட் -அஸ்ட்ரசெனிகா வைரஸ் தடுப்பூசிகளை மூன்று வாரங்களில் இலங்கைக்கு கொண்டுவரும் ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இவ்வாறு கொண்டுவரும் ஒக்ஸ்போர்ட் -அஸ்ட்ரசெனிகா தடுப்பூசிகளை பொதுமக்களுக்கு பயன்படுத்த முடியும் எனவும், 60 வயதிற்கு மேற்பட்ட நபர்களுக்கு இந்த தடுப்பூசிகளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், 60 வயதிற்கு மேற்பட்ட 38 லட்சத்திற்கும் அதிகமான பொதுமக்கள் நாட்டில் வாழ்கின்றனர். எனவே அவர்கள் அனைவருக்கும் ஒரே நேரத்தில் தடுப்பூசிகளை பெற்றுக்கொடுக்க முடியாது. ஆகவே விசேட தேவைகொண்ட நபர்களுக்கும், தொற்றா நோய்களில் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ள நபர்களையும் கருத்தில் கொண்டு அவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
இந்நிலையில் பெப்ரவரி மாதம் நடுப்பகுதியில் சீனாவில் இருந்தும் "சைனோபோர்ம்" கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ளதாகவும், இந்தியாவில் இருந்தும், சீனாவில் இருந்து கொண்டுவரப்படும் தடுப்பூசிகள் ஒரே காலகட்டத்தில் இலங்கைக்கு கிடைக்கும் நிலையில் அதனையும் பயன்படுத்தி இலங்கையின் தற்போது உள்ள நிலைமைகளை கட்டுப்படுத்த முடியும் எனவும் பிரதி சுகாதார பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 19 Evening