ஈஸ்டர் தாக்குதல் வழக்கில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவுக்கும் மரண தண்டனை
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்கத் தவறியதன் மூலம் குற்றவியல் பொறுப்பைத் தட்டிக்கழித்த குற்றச்சாட்டின் பேரில், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவுக்கு கொழும்பு நிரந்தர மூன்று நீதியரசர்கள் கொண்ட உயர் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.
குறித்த உத்தரவு இன்று (31) பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களைத் தடுக்கத் தவறியதாகவும், முன்கூட்டியே கிடைத்த உளவுத்துறை தகவல்களைப் பொருட்படுத்தாமல் கடமையை மீறியதாகவும் குற்றஞ்சாட்டி, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு எதிராக 855 குற்றச்சாட்டுகளைக் கொண்ட குற்றப்பத்திரிகையை சட்டமா அதிபர் கொழும்பு உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்.
மரண தண்டனை
இதன்படி இன்றைய தினம் இந்த வழக்கு விசாரணையில் போதுமான புலனாய்வுத் தகவல்கள் முன்கூட்டியே கிடைத்திருந்த போதிலும், 2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்கத் தவறியதாகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், முன்னாள் காவல்துறைமா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கும்மூவரடங்கிய விசேட உயர்நீதிமன்றம் இன்று (31) மரண தண்டனை விதித்தது.

இந்நிலையில் இந்த வழக்கின் மற்றுமொரு பிரதிவாதியான ஹேமசிறி பெர்னாண்டோவுக்கு நீதிமன்றம் மரண தண்டனை தீர்ப்பை அறிவித்துள்ளது.
இந்த வழக்கு இன்று (31) பிரியந்த லியனகே, விராஜ் வீரசூரிய மற்றும் திலகரத்ன பண்டார ஆகிய நீதியரசர்கள் அடங்கிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, நீதியரசர்கள் பிரியந்த லியனகே மற்றும் திலகரத்ன பண்டார ஆகியோர் பெரும்பான்மை தீர்ப்பை அறிவித்தனர். அதில், சட்டமா அதிபர் தரப்பினால் ஹேமசிறி பெர்னாண்டோவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டிருந்த 855 குற்றச்சாட்டுகளில் 854 குற்றச்சாட்டுகளில் அவர் குற்றவாளி என தீர்மானிக்கப்பட்டது.
ஹேமசிறி பெர்னாண்டோவுக்கு கிடைத்த தகவல்
தீர்ப்பை அறிவித்த நீதியரசர்கள், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் இடம்பெறுவதற்கு முன்னைய தினம் மாலை, அரச புலனாய்வு சேவையின் அப்போதைய பணிப்பாளர் நிலந்த ஜயவர்தன, மறுநாள் இடம்பெறவிருந்த தாக்குதல் தொடர்பான தகவல்களை ஹேமசிறி பெர்னாண்டோவுக்கு அறிவித்திருந்ததாக தெரிவித்தனர்.
அந்த தகவல்களைப் பெற்றிருந்த போதிலும், பாதுகாப்புச் செயலாளர் என்ற வகையில் தாக்குதலைத் தடுப்பதற்கான எந்தவொரு பயனுள்ள நடவடிக்கையையும் அவர் மேற்கொள்ளவில்லை என நீதிமன்றம் குறிப்பிட்டது.

மேலும், புலனாய்வு அதிகாரிகளின் கூட்டமொன்றை கூட்டி தேவையான நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடியிருக்க முடியும் என்றும், முப்படையினருடன் இணைந்து தாக்குதலைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வாய்ப்பும் அவருக்கு இருந்ததாகவும் பெரும்பான்மை நீதியரசர்கள் சுட்டிக்காட்டினர்.
எனினும், அவ்வாறான நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என குறிப்பிட்ட நீதிமன்றம், தாக்குதல் காரணமாக உயிரிழப்புகள் ஏற்படக்கூடும் என்பதை அறிந்திருந்தும் அதனைத் தடுப்பதற்கான கடமையை நிறைவேற்றத் தவறியதாகத் தெரிவித்தது.
இதன் அடிப்படையில், தனது அரச கடமையை நிறைவேற்றத் தவறியமை மற்றும் கொலைக்கு உதவி, ஊக்கமளித்தமை தொடர்பான குற்றச்சாட்டுகளில் ஹேமசிறி பெர்னாண்டோ குற்றவாளி என பெரும்பான்மை நீதியரசர்கள் தீர்மானித்தனர்.
இதேவேளை, நீதியரசர் விராஜ் வீரசூரிய தனது சிறுபான்மை தீர்ப்பை அறிவித்தபோது, ஹேமசிறி பெர்னாண்டோவுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் நியாயமான சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட வகையில் நிரூபிக்கப்படவில்லை என தெரிவித்தார்.
அதன்படி, அவரை அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுதலை செய்ய வேண்டும் என நீதியரசர் விராஜ் வீரசூரிய குறிப்பிட்டார். எனினும், மூவரடங்கிய நீதியரசர்கள் குழுவின் பெரும்பான்மை தீர்ப்பின் அடிப்படையில், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
இது தொடர்பான மேலதிக விபரங்களுக்கு இந்த இணைப்பை தட்டவும்...ஹேமசிறி பெர்னாண்டோவுக்கும் மரண தண்டனை
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |