உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கில் பூஜித் ஜயசுந்தரவுக்கு மரண தண்டனை
போதுமான புலனாய்வுத் தகவல்கள் முன்கூட்டியே கிடைத்திருந்த போதிலும், 2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்கத் தவறியதாகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், முன்னாள் காவல்துறைமா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு கொழும்பு நிரந்தர மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்றம் இன்று (31) மரண தண்டனை விதித்துள்ளது.
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் காவல்துறைமா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு எதிராக சட்டமா அதிபர் தாக்கல் செய்திருந்த குற்றப்பத்திரிகை தொடர்பான தீர்ப்பை இன்று அறிவிக்கும் போதே இந்த உத்தரவு வழங்கப்பட்டது.
இந்த வழக்கில், 2022 ஆம் ஆண்டு மூவரடங்கிய மேல் நீதிமன்ற அமர்வு இரு பிரதிவாதிகளையும் அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவித்திருந்தது.
மேன்முறையீட்டை விசாரித்த உச்சநீதிமன்றம்
எனினும், அந்தத் தீர்ப்பை எதிர்த்து சட்டமா அதிபர் தாக்கல் செய்த மேன்முறையீட்டை விசாரித்த உச்சநீதிமன்றம், விடுதலைத் தீர்ப்பை இரத்து செய்து, பிரதிவாதிகளின் பாதுகாப்பு சாட்சிகளை மீண்டும் பதிவு செய்து வழக்கை மறுவிசாரணைக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டிருந்தது.

அதன்படி, வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், இன்று கொழும்பு நிரந்தர மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்கியுள்ளது.
பெரும்பான்மைத் தீர்ப்பை வாசித்த மூவரடங்கிய நீதிமன்றத் தலைவர் நீதிபதி பிரியந்த லியனகே (சட்டமா அதிபர் மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த 855 குற்றச்சாட்டுகளில் 854 நிறுபிக்கப்பட்டது), 2019 ஏப்ரல் 20 ஆம் திகதி மாலை, அப்போதைய அரச புலனாய்வு சேவையின் பணிப்பாளர் நிலந்த ஜயவர்தன, மறுநாள் ஈஸ்டர் ஞாயிறன்று கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும் சுற்றுலா விடுதிகள் மீது தற்கொலைத் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாகத் தெளிவான புலனாய்வுத் தகவலை முன்னாள் காவல்துறைமா அதிபருக்கு வழங்கியிருந்ததாகக் குறிப்பிட்டார்.
அவ்வாறான எச்சரிக்கை கிடைத்திருந்த போதிலும், தாக்குதலைத் தடுக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும், நாட்டின் காவல்துறைமா அதிபராக பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பை அவர் நிறைவேற்றத் தவறியதாகவும் நீதிபதி சுட்டிக்காட்டினார்.
அந்தக் கடமையின்மை காரணமாக 268 பேர் உயிரிழந்ததுடன், மேலும் 586 பேர் காயமடைந்தனர் என்றும், குற்றத்தின் தீவிரத்தை கருத்தில் கொண்டு பிரதிவாதிக்கு மரண தண்டனை விதிக்கப்படுவதாக பெரும்பான்மை நீதிபதிகள் அறிவித்தனர்.
இதற்கிடையில், சிறுபான்மைத் தீர்ப்பை வழங்கிய நீதிபதி விராஜ் வீரசூரிய(855 குற்றச்சாட்டுகளில் ஒன்று மாத்திரம்) , பிரதிவாதிக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை சந்தேகத்திற்கு இடமின்றி அரசுத் தரப்பு நிரூபிக்கத் தவறியுள்ளதாகக் குறிப்பிட்டு, அவரை குற்றமற்றவர் என விடுவிக்க வேண்டும் என்ற கருத்தை வெளியிட்டார்.
இதேவேளை, இதே வழக்கில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவுக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு பின்னர் அறிவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
நான்கு மணித்தியாலங்களுக்கும் மேலாக நீடித்த தீர்ப்பு வாசிப்பின் முடிவில், முன்னாள் காவல்துறைமா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |