மீண்டும் வாய்ப்பு வழங்க முடியாது : பூஜித் ஜயசுந்தரவின் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களைத் தடுக்கத் தவறியமை மற்றும் கவனக்குறைவாக இருந்தமை தொடர்பில் தொடரப்பட்ட கொலை மற்றும் கொலை முயற்சி வழக்கில், முன்னாள் காவல்துறைமா அதிபர் பூஜித் ஜயசுந்தர முன்வைத்த கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
நீதிபதிகளான பிரியந்த லியனகே, விராஜ் வீரசூரிய மற்றும் திலகரத்ன பண்டார ஆகியோரைக் கொண்ட கொழும்பு மேல் நீதிமன்ற விசேட நீதாய நீதிமன்ற ஆயம் நேற்று (24) இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
கடந்த மார்ச் 26ஆம் திகதி பூஜித் ஜயசுந்தர நீதிமன்ற கூண்டிலிருந்து வாக்குமூலம் அளித்திருந்த நிலையில் அதில் சில விடயங்களை குறிப்பிடத் தவறிவிட்டதாகவும், எனவே மேலதிகமாக இரண்டு விடயங்களை விளக்குவதற்கு அனுமதி கோரியும் அவரது சட்டத்தரணி ரோஷன் தெஹிவல நேற்று நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.
கடும் எதிர்ப்புத் தெரிவிப்பு
சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான மேலதிக மன்றாடியார் நாயகம் திலீப பீரிஸ் இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்ததுடன் இவ்வாறான கோரிக்கையை அனுமதிப்பதற்கு சட்டத்தில் இடமில்லை எனவும் சுட்டிக்காட்டினார்.

இரு தரப்பு வாதங்களையும் பரிசீலித்த தலைமை நீதிபதி பிரியந்த லியனகே, பூஜித் ஜயசுந்தரவுக்கு ஏற்கனவே தனது தரப்பு நியாயங்களைக் கூற முழுமையான வாய்ப்பு வழங்கப்பட்டதாகத் தெரிவித்தார்.
கூண்டிலிருந்து வழங்கப்படும் இவ்வாறான வாக்குமூலங்கள் ஒரு சிறப்புரிமை என்றும், அவற்றை குறுக்கு விசாரணை செய்ய முடியாது என்பதால், மீண்டும் மீண்டும் அத்தகைய வாய்ப்பை வழங்குவது சட்டவிரோதமானது என்று நீதிபதி குறிப்பிட்டதையடுத்து அவரின் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது.
மீண்டும் விசாரணை
அத்துடன் பிரதிவாதி தரப்பில் மேலதிக சாட்சியாளர்களை அழைக்கப் போவதில்லை என அவரது சட்டத்தரணி தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், சாட்சியமளிக்க வந்திருந்த ஓய்வுபெற்ற சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் நந்தன முனசிங்க மற்றும் சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் வருண ஜயசுந்தர ஆகியோரை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த வழக்கு மீண்டும் எதிர்வரும் மே மாதம் 22ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தகக்து.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
6 நாட்கள் முன்