மின்சாரசபை மறுசீரமைப்பு சட்டமூலம் தொடர்பில் மின்சக்தி அமைச்சருக்கு சரித்த ஹேரத் கடிதம்
மின்சாரசபை மறுசீரமைப்பு சட்டமூலத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள முன்மொழிவுகளின் செயற்திறனையும், நிலைபேறான தன்மையையும் உறுதிசெய்யக்கூடிய வகையில் அவை முழுமையான மதிப்பாய்வுக்கு உட்படுத்தப்படவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சரித்த ஹேரத் கஞ்சன விஜேசேகரவிடம் கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை குறித்த சட்டமூலத்தில் காணப்படும் கரிசனைக்குரிய விடயங்களையும் அவர் மேலும் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.
உத்தேச மின்சாரசபை மறுசீரமைப்பு சட்டமூலத்துக்கு எதிராக இலங்கை மின்சாரசபை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் நிலையில், இச்சட்டமூலம் குறித்து சரித்த ஹேரத்தினால் காஞ்சன விஜேசேகரவுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கும் கடிதத்தில் கூறப்பட்டுள்ள விடயங்களாக...
மின்சாரத்துறை அமைச்சர் சமர்ப்பித்த
''தற்போது முன்மொழியப்பட்டிருக்கும் மின்சாரத்துறை மறுசீரமைப்பு யோசனைகள் தொடர்பில் நிலவும் கரிசனைகள் குறித்து உங்களது கவனத்துக்குக்கொண்டுவர விரும்புகின்றேன்.
இலங்கையின் மின்சாரத் துறையானது செயற்திறனை மேம்படுத்தல், போட்டித்தன்மையை ஊக்குவித்தல், செலவினங்களைக் குறைத்தல், தூய எரிபொருள் மூலங்களைப் பயன்படுத்துதல் போன்றவற்றை இலக்காகக் கொண்டு 2000 ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து பல்வேறு மறுசீரமைப்புக்களுக்கு உள்ளாகிவருகின்றது.
இந்த நிலைமாற்றத்தின் மைல்கல் அடைவானது அண்மையில் மின்சாரத்துறை அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட மின்சாரசபை மறுசீரமைப்பு சட்டமூலத்துக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியபோது அடையப்பட்டது.
கடந்த டிசம்பர் மாதம் 8ஆம் திகதி வர்த்தமானியில் வெளியிடப்பட்ட இச்சட்டமூலத்தின் பிரதான நோக்கம் இலங்கை மின்சாரசபையை மறுசீரமைப்பதும், அதன் சேவை வழங்கலுக்கு அவசியமான வசதிகளைச் செய்துகொடுப்பதுமேயாகும்.
மின்சாரத்துறை மறுசீரமைப்பு
இருப்பினும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ள மின்சாரத்துறை மறுசீரமைப்பு முன்மொழிவுகள் முழுமையான மதிப்பாய்வுக்கு உட்படுத்தப்படுவதும், அவை பொருளாதார, அபாய மதிப்பீடு மற்றும் தொழில்நுட்ப ரீதியான ஆய்வு முடிவுகளுக்கு அமைவாகக் காணப்படுவதும் இன்றியமையாததாகும்.
மின்சாரத்துறை போன்ற மிகமுக்கியமானதொரு துறையில் மேற்கொள்வதற்குத் திட்டமிட்டிருக்கும் மறுசீரமைப்புக்களினால் ஏற்படக்கூடிய விளைவுகள் மற்றும் தாக்கங்களை அறிந்துகொள்வதற்கு அது உதவும்.
ஆகவே இத்துறையில் மேற்கொள்ளப்படும் மறுசீரமைப்புக்களின் செயற்திறன் மற்றும் நிலைபேறான தன்மை என்பவற்றை உறுதிசெய்வதற்கு முழுமையானதும், வெளிப்படைத்தன்மை வாய்ந்ததுமான ஆய்வை முன்னெடுப்பது அவசியமாகும்.
அதன்படி, தற்போது முன்மொழியப்பட்டுள்ள மறுசீரமைப்புக்களில் முக்கிய கரிசனைக்குரிய சில விடயங்கள் அடையாளங்காணப்பட்டுள்ளன.
பாவனையாளர் பாதுகாப்பை உறுதிப்படுத்தல்
மின்சாரத்துறை அமைச்சருக்கு வழங்கப்படக்கூடிய சமனற்ற அதிகாரங்கள், அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை மற்றும் மின்சாரசபை மறுசீரமைப்பு சட்டமூலம் ஆகிய இரண்டிலும் உள்ளடக்கப்பட்டுள்ள இலக்குகளில் காணப்படும் குறிப்பிடத்தக்க அளவிலான வேறுபாடுகள், உரிய கட்டமைப்புக்களுக்கான நபர்களைத் தெரிவுசெய்து நியமிக்கும் செயன்முறையில் போதிய வெளிப்படைத்தன்மையின்மை.
அத்துடன் அவசியமான திருத்தங்களை மேற்கொள்வதற்கு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் மாத்திரம் இடமளிக்கக்கூடிய வகையிலான மறுசீரமைப்பு காலம், இச்சட்டமூலம் நாட்டின் ஏனைய சில சட்டங்களுடன் ஒருங்கிணையாமை, இலங்கை மின்சாரசபைக்கு சொந்தமான சொத்துக்கள் கைமாற்றப்படல், நிர்வாகக் கட்டமைப்பின் சுயாதீனத்தன்மை கேள்விக்குள்ளாக்கப்படல், பாவனையாளர் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான சரத்துக்கள் இன்மை போன்றன அக்கரிசனைகளில் உள்ளடங்குகின்றன.
எனவே, மின்சாரத்துறை மறுசீரமைப்பின் செயற்திறனை உறுதிப்படுத்துவதை முன்னிறுத்தி இவ்விடயங்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொள்கின்றேன்'' என அக்கடிதத்தில் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |