கோட்டாபயவுக்கு உயர் நீதிமன்றம் அழைப்பாணை
முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவிற்கு உயர் நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது.
துமிந்த சில்வாவை அதிபர் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்தமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மனுக்கள் தொடர்பாகவே உயர் நீதிமன்றம் இந்த அழைப்பாணையை விடுத்துள்ளது.
துமிந்த சில்வா விடுதலை
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட துமிந்த சில்வாவை அதிபர் மன்னிப்பின் கீழ் விடுதலை செய்திருந்தார்.
இந்த தீர்மானத்தை வலுவிழக்கச் செய்யுமாறு கோரி, பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் மகள் ஹிருணிகா பிரேமச்சந்திர, அவரது மனைவி சுமனா பிரேமச்சந்திர மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அதிபர் சட்டத்தரணி கசாலி ஹுசைன் ஆகியோர் மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
உயர் நீதிமன்ற அமர்வு
இது மனுக்கள் இன்று முர்து பெர்னாண்டோ மற்றும் யசந்த கோதாகொட ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
குறித்த மனுவில் கோட்டாபய ராஜபக்சவை பிரதிவாதியாக குறிப்பிடுமாறு மனுதாரர்களின் சட்டத்தரணிகள், மன்றில் கோரிக்கை விடுத்தனர்.
இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட உயர் நீதிமன்றம், கோட்டாபய ராஜபக்சவை சம்பந்தப்பட்ட மனுக்களில் பிரதிவாதியாக குறிப்பிட அனுமதித்ததுடன், டிசம்பர் 16ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அவருக்கு அழைப்பாணை விடுத்துள்ளது.