துமிந்த சில்வாவின் விடுதலை -ஆட்சியின் சீரழிவுக்கு நல்ல உதாரணம் -கேணல் ஹரிஹரன் விமர்சனம்
மரணதண்டனைக் கைதியான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கிய விவகாரம் இலங்கையில் நல்லாட்சியின் சீரழிவுக்கு நல்ல உதாரணமாகும்.உண்மையில்,பொசன் போயா தினத்தை முன்னிட்டு மன்னிப்பு வழங்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட 93 கைதிகளில் சில்வாவும் ஒருவர். பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அதேவேளை வழக்கு எதுவும் தொடுக்கப்படாத 16 தமிழர்களும் மன்னிப்பு அளிக்கப்பட்டவர்களில் அடங்குவர் என்பது கவனிக்கத்தக்கது.
இவ்வாறு தனது அரசியல் பத்தியில் தெரிவித்துள்ளார் கேணல் ஹரிஹரன்.அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
வசதியான குடும்ப பின்னணியைக் கொண்ட தனவந்தரான துமிந்த சில்வா , கோட்டாபயவின் விசுவாசி என்று கருதப்படுகிறார். நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது அவர் கோட்டாபயவுடன் நெருக்கமாக பணியாற்றி பாதுகாப்பு அமைச்சில் ஒரு ஒருங்கிணைப்பாளராக செயற்பட்டவர்.
2011 ஒக்டோபர் 8 உள்ளூராட்சி தேர்தல்களின்போது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான பாரத லக்ஸ்மன் பிரேமச்சந்திரவை சுட்டுக்கொலை செய்ததாக சில்வாவையும் வேறு நான்கு பேரையும் 2016 ஆம் ஆண்டில் கொழும்பு மேல்நீதிமன்றம் குற்றவாளிகளாக கண்டது.
ஐந்து நீதியரசர்களைக் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு 2018 சில்வாவின் மேன்முறையீட்டை நிராகரித்து மரணதண்டனையை ஊர்ஜிதம் செய்தது. 18 மாதங்களுக்கு முன்னர் ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு கோட்டாபயவினால் வழங்கப்பட்ட இரண்டாவது மன்னிப்பு இதுவாகும்.
2000 ஏப்ரலில் மிருசுவிலில் மூன்று குழந்தைகள் உட்பட எட்டு குடிமக்களை கொலை செய்ததாக 2015 குற்றவாளியாகக் காணப்பட்ட முன்னாள் இராணுவ சார்ஜன்ட் சுனில் இரத்நாயக்கவை 2020 மார்ச்சில் கோட்டாபய மன்னிப்பளித்து விடுதலை செய்தார் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.