தொல்லியல் திணைக்களத்தின் நடவடிக்கைக்கு அகில இலங்கை இந்து மாமன்றம் கண்டனம்
தொல்லியல் திணைக்களம் வரலாற்றுச் சிறப்புமிக்க கீரிமலை கேணியையும் அடாத்தாக தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு எதிராக அகில இலங்கை இந்து மாமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
சைவ ஆலயங்களை தொல்பொருள் திணைக்களம் கையகப்படுத்த நினைப்பது கண்டிக்கத்தக்க விடயமென்றும் அகில இலங்கை இந்து மாமன்றம் வெளியிட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இலங்கையில் உள்ள சைவ ஆலயங்களை மீதான தொல்லியல் திணைக்களத்தின் ஆக்கிரமிப்பு முயற்சியால் சைவ மக்கள் தமது அடையாளங்களை ஒன்றன் பின் ஒன்றாக இழக்கும் துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள்.
இது கவலைக்குரியதும் கண்டிக்கப்பட வேண்டியதுமான விடயமென குறித்த அறிக்கையில் அகில இலங்கை இந்து மாமன்றம் தெரிவித்துள்ளது.
இவ்வாறான செயற்பாடுகள் முளையிலேயே கட்டுப்படுத்தப்பட வேண்டும் என அகில இலங்கை இந்து மாமன்றம் வலியுறுத்தியுள்ளது.
கீரிமலை நகுலேஸ்வர ஆலய கேணி சைவமக்களுக்குரியது
நூற்றாண்டு காலத்துக்கும் மேலாக வலி வடக்கு பிரதேச சபையால் நிர்வகிக்கப்பட்டு வரும் ஈழத்து பஞ்ச ஈஸ்வரங்களில் ஒன்றான கீரிமலை நகுலேஸ்வர ஆலயத்தின் அருகில் அமைந்துள்ள இந்தக் கேணிக்கு தமது நீத்த உறவினர்களின் பிதிர்க்கடன்களை நிறைவேற்ற வெளிநாடுகளிலிருந்தும் சைவ மக்கள் வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இவ்வாறிருக்கையில், தொல்லியல் திணைக்களத்தின் சைவ மக்களுக்கு எதிரான செயற்பாடுகள் தடுக்கப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், சிறுபான்மை மக்களின் மத வழிபாடுகளை தடுக்கின்ற செயற்பாடுகள் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அரசாங்கம் சைவ ஆலயங்களை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சிப்பதன் மூலம் நாட்டிலுள்ள சைவத் தமிழ் மக்களின் நம்பிக்கையை இழந்து வருவதாக அகில இலங்கை இந்து மாமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
