'இலங்கையில் விடுதலைப் புலிகள் தாக்குதல் திட்டம்' - த ஹிந்துவின் செய்தியை பாதுகாப்பு அமைச்சு நிராகரிப்பு
இலங்கையில் முன்னாள் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் தாக்குதல்களை மேற்கொள்ளும் வகையில் மீள் ஒருங்கிணைந்துவருவதாக தெரிவிக்கப்படும் தகவல்களை பாதுகாப்பு அமைச்சு நிராகரித்துள்ளது.
இலங்கையில் விடுதலைப் புலிகளின் தாக்குதல் திட்டம் தொடர்பில் இந்திய உளவுத்துறையின் ஆதாரங்களை மேற்கோள்காட்டி, த ஹிந்து வெளியிட்ட செய்தி முற்றிலும் ஆதரமற்ற ஒன்றென பாதுகாப்பு அமைச்சு கூறியுள்ளது.
எனினும் இது குறித்து இந்திய உளவுத்துறை சேவையிடம் வினவியதாகவும், அந்தத் தகவல் பொதுவான ஒன்றாக வழங்கப்பட்டதுடன், அது தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு, உரிய தகவல்கள் தெரிவிக்கப்படும் என இலங்கைக்கு கூறப்பட்டதாகவும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், தேசிய பாதுகாப்பு தொடர்பாக உளவுத்துறை மற்றும் பாதுகாப்புப் படையினருக்கு கிடைத்த தகவல்கள் மற்றும் அனைத்துத் தகவல்களும் முறையாக விசாரிக்கப்படும் என பாதுகாப்பு அமைச்சு கூறியுள்ளது.
இந்தத் தகவல்கள் அந்தந்த பாதுகாப்புப் படையினருக்கு தெரியப்படுத்தும் அதே வேளையில், பாதுகாப்பை பலப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக பாதுகாப்பு அமைச்சு இன்று விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய உளவுத்துறை அறிக்கைகளை மேற்கோள்காட்டிய இந்தச் செய்தியானது இலங்கை ஊடகங்களால் வெளியிடப்பட்டு, தற்போது சமூக வலைத்தளங்களில் அது தீவிரமாக பரப்பட்டுவருகின்றது. இலங்கையின் அரசியல் தலைவர்களும் இந்தச் செய்தி குறித்து எதிர்வினைகளை பதிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
