ஹிருணிகாவிற்கு வழங்கப்பட்டுள்ள புதிய பதவி
ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்குத் (Hirunika Premachandra) தேசியப் பட்டியல் வாய்ப்பு வழங்கப்படாமை தொடர்பில் கடும் அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது.
எனினும், உள்ளுராட்சி சபைத் தேர்தலில் கொழும்பு மாநகர சபைக்கு (Colombo Municipal Council) மேயர் வேட்பாளராக ஹிருணிகாவை களமிறக்குவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி திட்டமிட்டுள்ளது எனக் கூறப்படுகின்றது.
கடும் இழுபறிக்கு மத்தியில் தேசியப் பட்டியல் பிரச்சினைக்கு ஐக்கிய மக்கள் சக்தி (SJB) தீர்வு கண்டுள்ளது.
தேசியப் பட்டியல் வாய்ப்பு
ஐக்கிய மக்கள் கூட்டணி சிதையாத வகையில் பங்காளிக் கட்சிகளுக்கும் தேசியப் பட்டியல் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி ஐக்கிய மக்கள் சக்திக்குக் கிடைக்கப் பெற்ற ஐந்து தேசியப் பட்டியல் ஆசனங்களில், பங்காளிக் கட்சிகளுடன் கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு அமைய மூன்று ஆசனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச்செயலாளர் நிஷாம் காரியப்பர், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர் ஆ.மொஹமட் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் சுஜீவ சேனசிங்க ஆகியோரின் பெயர்கள், தேர்தல் ஆணைக்குழுவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தேசியப் பட்டியல் உறுப்பினராக இதற்கு முன்னர் பெயரிடப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |