நாடாளுமன்ற உறுப்பினர் பதவி தொடர்பில் ஹிருணிகா வெளியிட்ட அறிவிப்பு
நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்பட்டால் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வதாக ஹிருணிகா பிரேமச்சந்திர (Hirunika Premachandra) தெரிவித்துள்ளார்.
ஹிருணிகாவிற்கு தேசியப்பட்டியல் ஆசனம் வழங்குவதற்கு வெளியான தகவல் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரான ஹரீன் பெர்னாண்டோ (Harin Fernando) நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் பதவியை இழந்தார்.
பதவியை வழங்கமாறு கோரியதில்லை
இந்நிலையில், ஹரீன் பெர்னாண்டோ வெற்றிடத்திற்காக தாம் நியமிக்கப்பட்டால் அந்தப் பதவியை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வதாக ஹிருணிகா தெரிவித்துள்ளார்.
எனினும் அந்தப் பதவியை தமக்கு வழங்கமாறு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கோரியதில்லை என ஹிருணிகா பிரேமச்சந்திர குறிப்பிட்டுள்ளார்.
மேலும் சஜித் பிரேமதாசவை (Sajith Premadasa) ஊடக நிறுவனங்களின் தேவைக்கு ஏற்ற வகையில் ஆட்டுவிக்க முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கட்சி உறுப்புரிமையிலிருந்து இடைநிறுத்தம்
ஐக்கிய மக்கள் சக்தியில் அங்கம் வகித்த ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோர் கட்சியின் உறுப்புரிமையிலிருந்து இடைநிறுத்தப்பட்டிருந்தனர்.
இதற்கு எதிராக மனுஷ நாணயக்கார மற்றும் ஹரின் பெர்ணாண்டோ ஆகியோர், ஐக்கிய மக்கள் சக்தியின் இந்தத் தீர்மானத்தைச் செல்லுபடியற்றதாக்கி உத்தரவிடுமாறு கோரி உயர்நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
குறித்த மனு இன்றைய தினம் உயர் நீதிமன்றில் மூவர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் ஆராயப்பட்டபோது, ஐக்கிய மக்கள் சக்தியின் தீர்மானம் சட்டரீதியானது என்று தீர்ப்பளிக்கப்பட்டு, மனு நிராகரிக்கப்பட்டது.
இந்த நிலையில் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதை தொடர்ந்து ஹரின் பெர்ணான்டோ அமைச்சர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |