உக்ரைனுக்கு சென்ற ஹொலிவுட் நடிகை (video)
ஹொலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி நேற்று (ஏப்ரல் 30) உக்ரைனில் உள்ள லிவிவ் நகருக்கு விஜயம் செய்தார்.
போரினால் இடம்பெயர்ந்து நகரிலுள்ள புகையிரத நிலையத்தில் தங்கியுள்ள மக்களைச் சந்திப்பதற்காக அவர் வந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
புகையிரத நிலையத்திற்குச் செல்லும் வழியில், இடம்பெயர்ந்தவர்களுடன் பணிபுரியும் தன்னார்வலர்களையும் அவர் சந்தித்தார்,புகையிரத நிலையத்தில் இருந்தவர்களில் பெரும்பாலானவர்கள் இரண்டு முதல் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள் என்று அவர் குறிப்பிட்டார்.
46 வயதான ஜோலி, அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகருக்கான சிறப்புத் தூதுவராகவும் உள்ளார்.
ஐக்கிய நாடுகளின் அகதிகள் நிறுவனம் கடந்த இரண்டு மாதங்களில் 12.7 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளதாகவும், இது உக்ரைனின் போருக்கு முந்தைய மக்கள் தொகையில் சுமார் 30% ஆகும் எனவும் தெரிவித்துள்ளது.
அவர் புகையிரத நிலையத்தில் கண்காணிப்புச் சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டிருந்தபோது, வான்வழித் தாக்குதல் சைரன் ஒலிக்கத் தொடங்கியதாகவும், பின்னர் தனது உதவியாளர்களுடன் நிலையத்திலிருந்து விரைவாக வெளியேறியதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
