இலங்கைக்கு ஐ.எம்.எவ் பச்சைக்கொடி
சர்வதேச நாணய நிதியப் பிரதிநிதிகளுடன் இன்று இடம்பெற்ற கலந்துரையாடல் வெற்றிகரமாக அமைந்ததாக நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
இதன்போது சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகள் இலங்கைக்கான ஆதரவை தெரிவித்ததாக கூறியுள்ள அமைச்சர், எதிர்வரும் காலங்களில் சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட நிதி வசதியின் முதல் தவணையை இலங்கை பெற்றுக்கொள்ளும் என நம்பிக்கை தெரிவித்தார்.
விசேட கலந்துரையாடல்
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும் நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டியவிற்கும் இடையில் இன்று(26) விசேட கலந்துரையாடல் ஒன்று நிதியமைச்சில் இடம்பெற்றது.
சர்வதேச நாணய நிதியத்தின் இந்தியா, இலங்கை, பங்களாதேஷ் மற்றும் பூட்டான் ஆகிய நாடுகளுக்குப் பொறுப்பான நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியம் உள்ளிட்ட பிரதிநிதிகளின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடல் வெற்றியளித்துள்ளதாக அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.
இந்தக் கலந்துரையாடலில் அரச வருமானம் தொடர்பான விடயங்கள் மற்றும் மக்கள் எதிர்நோக்கும் சிரமங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.
அத்துடன், கடன் தவணை கொடுப்பனவுகளை பெற்றுக்கொள்வது தொடர்பான தொழில்நுட்ப விடயங்கள் தொடர்பிலும் வெற்றிகரமாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
நிதி வசதியை பெறுவதற்கான தகுதி
இந்த கலந்துரையாடலின் பிரகாரம் சர்வதேச நாணய நிதியத்தின் நிதி வசதியை பெறுவதற்கான தகுதியை இலங்கை பெறும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்தக் கலந்துரையாடலில் சர்வதேச நாணய நிதியத்தின் மாற்று நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி சந்திரநாத் அமரசேகர மற்றும் மத்திய வங்கியின் பிரதிப் பணிப்பாளர் கலாநிதி விபுல விக்கிரமாராச்சி ஆகியோரும் கலந்துகொண்டனர்.
