இலங்கைக்கு உடனடி கடன் சாத்தியமில்லை - ஐ.எம்.எவ் புதிய தயக்கம்
இலங்கை சர்வதேச நாணய நிதியத்தின் கடனைப்பெறுவதற்கு உதவும் வகையில் சீனாவின் ஏற்றுமதி இறக்குமதி வங்கி இலங்கைக்கு இரண்டு வருட கால அவகாசத்தை வழங்கியிருந்தாலும், சீனாவின் இந்த இரண்டு வருட காலஅவகாசம் நாணய நிதியத்தின் கடனுக்குரிய ஒப்புதலை உடனடியாகப் பெறுவதற்குப் போதுமானதல்ல என்ற செய்தி தற்போது வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், இலங்கையில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள வரி அதிகரிப்பு முறைமைகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டால் சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவியைப் பெற்றுக் கொள்ள முடியாது என அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
கடனுதவிக்கான ஒப்பந்தம்
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் இன்றைய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த பந்துல குணவர்தன, சர்வதேச நாணய நிதியம் கடனுதவிக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடாவிட்டால் நெருக்கடியிலிருந்து மீள முடியாது என்றும் தெரிவித்தார்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,
துரதிஷ்டவசமாக சர்வதேச நாணய நிதியம் கடனுதவிக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடாவிட்டால் இந்த நாட்டுக்கு நாளை என்ற ஒன்று இருக்காது.
சர்வதேச மட்டத்தில் எம்மால் எந்தவொரு கொடுக்கல் வாங்கல்களையும் செய்ய முடியாது. சர்வதேசத்துடனான கொடுக்கல் வாங்கல்களுக்கு உரிய தொழிநுட்ப உத்தரவாதத்தை வழங்குவது சர்வதேச நாணய நிதியமாகும்.
சர்வதேச நாணய நிதியம் , ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் உலக வங்கி உள்ளிட்டவற்றை நாடாமல் இந்த நெருக்கடிகளிலிருந்து மீள்வதற்கான வேலைத்திட்டம் எந்தவொரு அரசியல்வாதிகளிடமும் இல்லை.
கடனை மீளச் செலுத்துவதற்கான வருமானவழியொன்றினை நாம் சமர்ப்பிக்காவிட்டால் , கடன்மறுசீரமைப்பினை மேற்கொள்ள முடியாது என்பதை நாணய நிதியம் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது.
அதே போன்று நாணய நிதியம் வழங்குவதற்கு உத்தேசித்துள்ள கடனுதவியும் கிடைக்கப் பெறாது. அவ்வாறு கடன் கிடைக்கப் பெறாவிட்டால் அபிவிருத்திகளுக்கான கடன்களையும் பெற்றுக் கொள்ள முடியாது.
வரி அதிகரிப்பு
எனவே எமது வருமானத்தை அதிகரித்துக் கொள்ளவதற்காக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள வரி அதிகரிப்பிற்குள் அனைத்து தரப்பினரும் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
மாத வருமானமாக 45 000 ரூபாவிற்கும் அதிகமாகக் காணப்படும் அனைவரிடம் வரி அறவிடுமாறு நாணய நிதியம் குறிப்பிட்டுள்ளதாக அதிபர் ரணில் விக்ரமசிங்க அமைச்சரவையில் தெரிவித்தார்.
எவ்வாறிருப்பினும் இதனைச் செய்ய முடியாது என்பதன் காரணமாகவே , ஒரு இலட்சத்திற்கும் அதிக மாத வருமானம் பெறுவோரிலிருந்து வரி அறவிடப்படுகிறது.
எனவே வரி திருத்தங்களில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டால் சர்வதேச நாணய நிதியத்தின் உதவி ஒருபோதும் கிடைக்கப் பெறாது.
அவ்வாறானதொரு நிலைமை ஏற்பட்டால் இரு வாரங்களுக்கு மேல் நாட்டை நிர்வகித்துச் செல்ல முடியாது” - என்றார்.
