யாழ்ப்பாணம் - கண்டி A9 வீதியில் கோர விபத்து: சம்பவ இடத்திலேயே இருவர் பலி
காரும் மற்றும் தனியார் பேருந்தும் ஒன்றுடன் ஒன்று நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் பரிதாபமாக உயிரிழந்ததுடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்து யாழ்ப்பாணம் - கண்டி ஏ-9 பிரதான வீதியின் மெதவாச்சிப்ப பியூஸ்வெவ பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர்கள், பலல்ல பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய ராஜகுரு முதியன்சேலாகே அகில மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய ஜீவந்த சுமித் ஆகிய இருவராவர்.
விபத்து நிகழக் காரணம்
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கொழும்பிலிருந்து வவுனியா நோக்கிச் சென்ற தனியார் பேருந்து ஒன்றும், வவுனியாவிலிருந்து மஹவ நோக்கிச் சென்ற மோட்டார் காருமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளன.

பியூஸ்வெவ காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பக் கட்ட விசாரணைகளின் போது, கார் ஓட்டுநருக்குத் தூக்கம் ஏற்பட்டமையே இந்த விபத்து நிகழக் காரணமாக இருந்திருக்கலாம் எனச் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் மோட்டார் காரில் மூவர் பயணம் செய்துள்ளனர்.
படுகாயமடைந்த கார் ஓட்டுநர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், காரில் பயணம் செய்த ஏனைய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |