இலங்கையில் மருத்துவமனைகள் செயலிழக்கும் அபாயம்
இலங்கையில் இருந்து மருத்துவர்கள் வெளியேறிவரும் நிலையில், நாடாவிய ரீதியில் உள்ள மருத்துவமனைகள் செயலிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.
இந்த விடயத்தில் உடனடியாக தலையீடு செய்ய வேண்டும் என்ற விடயத்தை நேற்று எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுடனான சந்திப்பிலும் சுட்டிக்காட்டியதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளரான மருத்துவர் ஹரித்த அலுத்கே வலியுறுத்தியுள்ளார்.
அபாயம் குறித்த புள்ளிவிபரங்கள்
நாட்டை விட்டு வெளியேறும் மருத்துவர்கள்: ஏற்படப்போகும் நெருக்கடி |
இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்ட அவர், “எதிர்கட்சித் தலைவர் உட்பட, நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைவர்களுடன் கலந்துரையாடலை மேற்கொண்டோம்.
அவர்களுடன் வெளிப்படையாக கருத்துக்களை பரிமாறிக் கொள்ள அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்திற்கு வாய்ப்பு கிடைத்தது. விசேடமாக சுகாதாரத்துறையில் ஏற்பட்டுள்ள சவால்கள் குறித்து எடுத்துரைத்தோம்.
மருந்து பற்றாக்குறை, மருந்துகளின் அளவு தொடர்பாக ஏற்பட்டுள்ள பிரச்சினை, மருந்துகளின் விலை, உபகரணங்களின் செயலிழப்பு மற்றும் மருத்துவர்கள் உட்பட சுகாதார துறையினர் இந்த நாட்டை விட்டு வெளியேறுவதால் மருத்துவமனைகள் செயலிழக்கும் அபாயம் குறித்து புள்ளிவிபரங்களுடன் விடயங்களை முன்வைத்தோம்.
விசேடமாக மருத்துவர்களை நாட்டிற்குள் வைத்திருப்பதற்கு துரித வேலைத்திட்டத்தின் தேவைப்பாடு குறித்து எடுத்துக் கூறினோம்.
சுகாதார அமைச்சிடம் இருந்து பெற்ற தரவுகளுக்கு அமைய ஒராண்டிற்குள் ஆயிரத்து 100 ற்கும் அதிகமானவர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.
இந்த எண்ணிக்கை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கலாம். இதனால் மருத்துவமனைகளில் செயலிழக்கும் நிலைமை ஏற்படும். ஆகவே இந்த விடயத்தில் உடனடியாக தலையீடு செய்ய வேண்டிய தேவை உள்ளது.
முன்வைக்கப்பட்ட யோசனை
இலங்கையில் வைத்தியசாலைகள் மூடப்படும் அபாயம் |
இது தொடர்பான யோசனையை அதிபரிடமும் நாம் முன்வைத்துள்ளோம். எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட எதிர்கட்சியிலுள்ள அணியிடமும் அதிபரிடம் முன்வைத்த யோசனையை சமர்ப்பித்துள்ளோம்.
தற்போதுள்ள நிலைமையை மாற்றியமைக்கும் வகையில் எதிர்க்கட்சி என்ற வகையில் அவர்களுக்குள்ள பொறுப்பு மற்றும் தலையீடுகளை மேற்கொள்ளுமாறு நாம் கோரியுள்ளோம்” - என்றார்.