தனிநபராக தொடருந்தை கடத்திய நபர்! சுட்டுக்கொன்ற காவல்துறையினர்
சுவிட்சர்லாந்தில் யவெர்டனில் உள்ள தொடருந்து நிலையத்தில் நேற்று இரவு நின்று கொண்டிருந்த தொடருந்தை மர்ம நபர் ஒருவர் கடத்தியுள்ளார்.
அந்த மர்ம நபர் பயணிகளை கத்தி மற்றும் கோடாரியால் மிரட்டி தொடருந்தில் பணய கைதிகளாக பிடித்து வைத்துள்ளார்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் முதலில் அந்த நபரிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது அந்த நபர் முதலில் ஈரானின் பிரதான மொழியான பார்சி மொழியிலும் அதன் பிறகு ஆங்கிலத்திலும் பேசியதாகவும் கூறப்படுகிறது.
அதிரடியாக நுழைந்த காவல்துறையினர்
இந்த பேச்சுவார்த்தை சுமார் 4 மணி நேரமாக தொடர்ந்த நிலையில், இறுதியில் தொடருந்தில் அதிரடியாக காவல்துறையினர் நுழைந்துள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர் கோடாரியால் காவல்துறையினரை தாக்க பாய்ந்ததால் வேறு வழியில்லாமல் காவல்துறையினர் அந்த கடத்தல்காரனை சுட்டுக் கொன்றனர்.
இதையடுத்து பணயக்கைதிகளாக இருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த கடத்தலில் ஈடுபட்ட அந்த நபர் யார் என்பது குறித்த தகவல்களை காவல்துறையினர் இதுவரை வெளியிடவில்லை. இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |