அமெரிக்காவில் முன்னெப்போதும் இல்லாத அளவு பாதுகாப்பு: அணி திரண்டுள்ள மக்கள்
இஸ்ரேலில் இருந்து கடத்திச் செல்லப்பட்ட பணயக் கைதிகளை விடுவிக்குமாறு கோரி அமேரிக்காவில் பாரிய போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான மோதல் ஒரு மாதத்தையும் கடந்துவிட்டது. இந்த போரினால் மொத்தமாக பத்தாயிரம் பேருக்கும் மேல் உயிரிழந்துள்ளதோடு, இஸ்ரேலில் இருந்து கடத்திச் செல்லப்பட்ட பணயக் கைதிகள் குறித்து எந்தத் தகவலும் கிடைக்கப் பெறவில்லை.
இந்நிலையில், அவர்களை மீட்கும் நடவடிக்கைகளில் இஸ்ரேல் பாதுகாப்பு படை தீவிரமாக ஈடுபட்டு வருகிறதொடு, இஸ்ரேல் நாட்டில் இருந்து காசாவுக்கு பிடித்து செல்லப்பட்ட பணய கைதிகளை விடுவிக்க கோரி, அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி.யில் 2.9 லட்சம் பேர் பாரிய போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
யூதரின் பெருமை
இது குறித்து இஸ்ரேல் அதிபர் பெஞ்சமின் நெதன்யாகு கூறுகையில், “ஹமாஸ் அமைப்பினரால் பணய கைதியாக பிடித்து வைக்கப்பட்டு உள்ள குழந்தைகள், சிறுவர் சிறுமிகள், ஆண்கள் மற்றும் பெண்களுக்காக இந்த போராட்டம் நடத்த இவர்கள் ஒன்றிணைந்து உள்ளனர்.
அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் உலகம் முழுவதும் ஒவ்வொரு யூதரும் பெருமையுடனும் மற்றும் பாதுகாப்பாகவும் வாழ்வதற்கான உரிமைக்காக போராட்டம் நடைபெறுகிறது” எனக் கூறியுள்ளார்.
உள்நாட்டு பாதுகாப்பு
ஒக்டோபர் 7 ஆம் திகதிக்கு பின்னர் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவில் அதிக அளவில் மக்கள் கூடிய போராட்டமாக இது கருதப்படுகிறது.
இதற்காக முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன என அந்நாட்டின் உள்நாட்டு பாதுகாப்புக்கான துறை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.