பிணைக்கைதிகள் உயிருடன் வெளியேற மாட்டார்கள் : இஸ்ரேலுக்கு ஹமாஸ் விடுத்த எச்சரிக்கை
தெற்கு காசாவின் முக்கிய நகரத்தை இஸ்ரேல் குண்டுவீசித் தாக்கியிருக்கும் நிலையில், எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றாதவரை எந்தவொரு பிணைக்கைதிகளும் உயிருடன் வெளியேற மாட்டார்கள் என ஹமாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இஸ்ரேல் மீது கடந்த 7ஆம் திகதி ஹமாஸ் அமைப்பினர் திடீர் தாக்குதல் நடத்தியதையடுத்து இஸ்ரேல் பாதுகாப்பு படை காசா நகர் மீது தாக்குதல் நடத்தி வருகின்றது.
இந்த நிலையில், கடந்த மாதம் தற்காலிக போர் நிறுத்தத்தின் போது 80 இஸ்ரேல் பிணைக்கைதிகளுக்கு இணையாக 240 பலஸ்தீனக் கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.
ஹமாஸ் விடுத்த எச்சரிக்கை
எனினும் தெற்கு காசாவின் முக்கிய நகரத்தை இஸ்ரேல் குண்டுவீசித் தாக்கியிருக்கின்ற சூழ்நிலையில் தற்போது இஸ்ரேல் படையினர் நடத்தி வரும் கொடூரத் தாக்குதலுக்கு ஹமாஸ் அமைப்பினரும் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
இதேவேளை ஹமாஸிடம் இன்னும் பலர் பிணைக்கைதிகளாக உள்ள நிலையில் அவர்களை மீட்க இஸ்ரேல் படையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்தநிலையில் எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றாத வரை எந்தவொரு பிணைக்கைதிகளும் உயிருடன் வெளியேற மாட்டார்கள் என ஹமாஸின் ஆயுதப்பிரிவின் செய்தி தொடர்பாளர் அபு ஒபையா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்
17 ஆயிரத்திற்கும் அதிக மக்கள் பலி
"இஸ்ரேலிய படையுடன் தொடர்ந்து யுத்தம் நடத்துவோம், ஒவ்வொரு வீதியிலும் பகுதியிலும், காட்டுமிராண்டித்தனமான ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக சண்டை போடுவதைத் தவிர வேறு வழியில்லை.
எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றாத வரை எந்தவொரு பிணைக்கைதிகளும் உயிருடன் வெளியேற மாட்டார்கள். அத்தோடு, எதிரிகள் எங்களுடைய எதிர்க்கும் தன்மையை உடைப்பதையே முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளனர். ஆனால் நாங்கள் எங்கள் மண்ணில் புனிதமான முறையில் போராடுகிறோம்” என தெரிவித்தார்.
இதற்கிடையே காசாவில் புதிய போர் நிறுத்தத்தைக் கொண்டு வரவும், பிணைக்கைதிகளை விடுவிப்பதற்கான முயற்சியிலும் கத்தார் நாடு ஈடுபட்டு வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆனால் இஸ்ரேல் தெற்கு காசா பகுதிகளை குறிவைத்து பயங்கர தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேல், காசா மீது தொடர் தாக்குதல்களை நடத்தியதால் 17 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
you may like this
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |