யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு - கிழக்கு மக்களுக்கு வீடுகள் : பிரதி அமைச்சர் அறிவிப்பு
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மக்களுக்காக வீடுகளை நிர்மாணிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் ருவன் செனரத் தெரிவித்துள்ளார்.
இந்தவருடம் 34,000 வீடுகளை நிர்மாணிப்பதற்காக 500 பில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், குறிப்பாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து பாதிக்கப்பட்ட நிலையில் வீடுகளின்றி வாழும் மக்களின் நிலைமையைக் கருத்திற்கொண்டு வட மாகாணத்தில் மாத்திரம் 13,000 வீடுகளை நிர்மாணிக்க வேண்டிய தேவை காணப்படுகின்றது.
மலையக மக்களுக்கு வீடுகள்
இதற்கமைய இந்த ஆண்டு வடக்கு மாகாணத்தில் உள்ள மக்களுக்காக 2,500 வீடுகளை நிர்மாணிக்க திட்டமிட்டுள்ளோம்.
அதேபோன்று நாட்டின் பொருளாதாரத் துறைக்கு பெரும் பங்களிப்பு வழங்கும் பெருந்தோட்டத் துறையில் பணியாற்றும் மலையக மக்களுக்கும் வீடுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தேயிலைத் தோட்டங்களில் தேயிலைக் கொழுந்து பறிக்கும் பலர் நீண்ட காலமாக லயன் அறைகளிலேயே வசித்து வருகின்றனர். அவர்களுக்கு வீடுகளை வழங்கும் நோக்கில் இந்த அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் வீடமைப்புத் திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்த ஆண்டு 4,500 வீடுகளை நிர்மாணித்து வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறாக நாடளாவிய ரீதியில் நிலவும் வீடமைப்புத் தேவைகளை கருத்திற்கொண்டு செயற்படுகின்றோம்” என தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |