ஹவுதி கிளர்ச்சியாளர்களின் பதிலடி : ஏமன் இராணுவத்திற்கு ஏற்பட்ட பேரிழப்பு
ஏமனின் ஷப்வா மாகாணத்தில் உள்ள அல்-ஆலம் இராணுவ முகாம் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இன்று பாலிஸ்டிக் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் முகாமில் இருந்த 53 வீரர்கள் கொல்லப்பட்டனர், 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என தகவல் வெளியாகி உள்ளது.
முகாமின் பயிற்சி மையம் மீது ஹவுதிக்கள் 3 பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசியதாக ஏமன் ராணுவ செய்தித் தொடர்பாளர் கர்னல் மஜித் அல்-நசிலி தெரிவித்தார்.
மரணத்திற்கு பழிவாங்கப்படும்
கொல்லப்பட்ட அனைத்து வீரர்களும் சமீபத்தில் சேர்ந்த புதியவர்கள் என்றும், அவர்களின் மரணத்திற்கு பழிவாங்கப்படும் என்றும் ஜனாதிபதியின் கீழ் செயல்படும் ஏமனின் தலைமை கவுன்சில் தலைவர் (PLC) ரஷாத் அல்-அலிமி சூளுரைத்துள்ளார்.

முன்னதாக தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள சதா (Sadah) மாகாணத்தில் நேற்று(18) சவுதி நடத்திய வான்வழித் தாக்குதலில், 5 குழந்தைகள் மற்றும் 2 பெண்கள் உட்பட 9 பேர் கொல்லப்பட்டதாகவும் 30 பேர் காயமடைந்ததாகவும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
இந்தத் தாக்குதலுக்கு பழிவாங்குவோம் என ஹவுதிக்கள் சூளுரைத்த நிலையில் இராணுவ முகாம் மீதான தாக்குதல் நடந்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |