அரசியல்வாதி அல்லாத கோட்டாபய அரச தலைவரானது எப்படி?
2019ஆம் ஆண்டு அரச தலைவருக்கான தேர்தலின் போது நாடு இருந்த இக்கட்டான நிலையிலேயே கோட்டாபய ராஜபக்சவை அரச தலைவர் வேட்பாளராகக் கொண்டு வர வேண்டும் என்ற தீர்மானம் எடுக்கப்பட்டதென முன்னாள் இராஜாங்க அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுசில் பிரேமஜயந்த (Susil Premajayantha) தெரிவித்துள்ளார்.
கடந்த அரச தலைவருக்கான தேர்தலின் போது அரசியல்வாதி அல்லாத கோட்டாபய ராஜபக்சவை ஆதரித்து, தற்போது அவர் தொடர்பில் சுசில் பிரேமஜயந்த குறை கூறிவருகிறார்.
இந்த நிலையில், எமது ஊடகத்திற்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணல் ஒன்றில் இது குறித்து வினவிய போதே அவர் இவ்வாறு கூறியிருந்தார்.
தொடர்ந்தும் பதில் வழங்கிய அவர்,
“2015ஆம் ஆண்டு தேர்தல் காலத்தில் தான் கோட்டாபய ராஜபக்சவை எனக்கு தெரியவந்தது. அதற்கு முன்னர் அவ்வளவாகப் பழக்கம் இல்லை.
முன்னாள் அரச தலைவரும், தற்போதைய பிரதமருமான மகிந்த ராஜபக்சவின் பதவிக் காலத்தின்போது கோட்டாபய ராஜபக்ச ஒரு அரச அதிகாரியாகவே இருந்தார்.
மஹிந்த ராஜபக்சவின் உத்தரவுகளை செயற்படுத்துபவராகவே அவர் இருந்தார். எனவே அரசியலில் ஈடுபட்ட எங்களுக்கும் அவருக்கும் தொடர்புகள் பெரிதாக இருக்கவில்லை.
2019ஆம் ஆண்டு தேர்தலின் போது நாடு இருந்த நிலையிலேயே கோட்டாபய ராஜபக்சவை அரச தலைவர் வேட்பாளராக கொண்டு வர வேண்டும் என்ற தீர்மானம் எடுக்கப்பட்டது.
நாட்டின் பாதுகாப்பு அந்தக் காலத்தில் விழுந்திருந்தது. எனவே அதனை மையப்படுத்தி ஒருவரை அரச தலைவர் தேர்தலில் போட்டியிட வைக்க வேண்டும் என்ற நோக்கம் இருந்தது.
இலங்கையில் இளைஞர்களின் மனங்களை வெல்ல கூடிய, தொழில்நுட்பம் சார்ந்த அறிவுடைய, நாட்டின் சொத்துக்களை விற்பனை செய்யாத ஒருவரே அப்போது தேவையாக இருந்தது.
இதன் காரணமாகவே சிங்கள - பௌத்த பெரும்பான்மை வாக்குகளைக் கொண்டு, மூன்றில் இரண்டு பெரும் ஆட்சியைப் பெற முடிந்தது” என்றார்.