இலங்கை அழிவு நிலைக்கு வந்தது எப்படி?
இலங்கையில் நிலவுகின்ற பொருளாதார நெருக்கடிக்கு கொரோனா தொற்றும், ரஷ்ய -உக்ரைனிய யுத்தமுமே காரணம் எனக் காட்டுவதற்கு இலங்கை அரசாங்கம் முயற்சிக்கும் நிலையில், அது உண்மையல்ல என்பதை ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிறேமச்சந்திரன் (Suresh Premachandran) சுட்டிக்காட்டியுள்ளார்.
மாறிமாறிவந்த சகல அரசாங்கங்களும் பேசித் தீர்க்கப்படவேண்டிய ஒரு பிரச்சினையை யுத்தத்தின் மூலம் தீர்வுகாணப் புறப்பட்டதனால் பல பில்லியன்கள் இழப்பு ஏற்படுத்தப்பட்டதாக இன்று வெளியிட்ட அறிக்கையில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அழிவுகரமான ஒரு யுத்தத்திற்காக பலபில்லியன் டொலர்கள் பெறுமதியான ஆயுத தளபாடங்களும், யுத்தவிமானங்களும், யுத்த கப்பல்களும் கொள்வனவு செய்யப்பட்டதுடன், படையினரும் அரசாங்கத்தால் பல இலட்சங்களாக அதிகரிக்கப்பட்டதாக சுரேஸ் பிறேம்சந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
மாறிமாறிவந்த சகல அரசாங்கங்களும் தாங்களே உருவாக்கிய இனவிரோதச் செயற்பாட்டை உணர்ந்து, பேசித் தீர்க்கப்படவேண்டிய ஒரு பிரச்சினையை யுத்தத்தின் மூலம் தீர்வுகாணப் புறப்பட்டதனால் பல பில்லியன்கள் இழப்பு ஏற்படுத்தப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
திறைசேரியையும் மத்திய வங்கியையும் கொள்ளை அடித்தமையும், இலங்கையின் பன்முகத்தன்மைக்கேற்ற பொருளாதாரத் திட்டங்கள் இன்மையும் இன்று இந்த அழிவு நிலைக்கு வந்தமைக்கான காரணம் என்பதை சுட்டிக்காட்ட விரும்புவதாக அவர் கூறியுள்ளார்.
நாடு பொருளாதார ரீதியில் அபிவிருத்தி அடையவேண்டுமாக இருந்தால், இந்த நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மை இருக்க வேண்டும். ஆனால் தமிழ்த் தேசிய இனப்பிரச்சினை தீர்க்கப்படாததன் காரணமாக அந்த அரசியல் ஸ்திரத்தன்மை இன்னமும் இலங்கையில் ஏற்படாமலேயே இருப்பதாக சுரேஸ் பிறேமச்சந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
அரச தரப்பும், எதிர்த்தரப்பும் கடன்களை மறுசீரமைப்பது பற்றியும், புதிய கடன்கள் வாங்குவது பற்றி மாத்திரமே பேசுவதால் - இது மேலும் மேலும் இலங்கையின் கடன்சுமையை அதிகரிப்பதற்கே வழிவகுக்கும் எனவும் இதனை சிங்கள மக்களுக்காக தான் கூறுவதாகவும் சுரேஸ் பிறேமச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நாட்டின் அரசியல் முறைமை மாற்றப்படவேண்டும் என சிங்கள மக்கள் முன்வைத்துள்ள கோரிக்கையுடன் தாமும் ஒன்றுபடுவதாக தெரிவித்த அவர், மிகவும் பிற்போக்குத்தனமான ஒற்றையாட்சிமுறை மாற்றப்பட்டு அனைத்து மக்களும் சமத்துவமாக வாழக்கூடியதும், தமது பிரதேச அபிவிருத்திகளை தாமே செய்து கொள்வதற்கான ஒரு சமஷ்டி அமைப்பு முறை இந்த நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு மிகவும் முக்கியமானதென கருதுவதாக அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.


