இங்கிலாந்தின் இருண்ட வானை ஒளியால் நிறைத்த வெடிப்புச் சம்பவம் : அதிஷ்டவசமாக உயிர் பிழைத்த மக்கள்
இங்கிலாந்தின் ஒக்ஸ்போர்டிலுள்ள யர்ன்டன் ( Yarnton) பகுதியில் நேற்று (03) இரவு வேளையில் இருளான வானில் திடீரென சிவப்பு நிறத்தில் பாரிய வெளிச்சம் தோன்றி பின்னர் மிகப்பெரிய அளவில் வெள்ளை நிறத்தில் வானம் வெளிச்சமாக மாறியுள்ளது.
இந்த சம்பவமானது மக்கள் மத்தியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, இந்த சம்பவம் தொடர்பான காணொளிகளும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வெகுவாக பரவி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
2020 ஆம் ஆண்டு லெபனானின் பெய் ரூட்டில் தொழிற்சாலை ஒன்று வெடித்த போது ஏற்பட்ட வெளிச்சத்தை ஒத்ததாக இந்த வெளிச்சம் இருந்ததனால் மக்கள் மத்தியில் பெரும் அச்சமும் ஒக்ஸ்போர்டில் ஏதேனும் தொழிற்சாலை வெடித்து விட்டதோ என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
மின்னல்தாக்கம்
பலருக்கும் இங்கே குண்டு வெடிப்பு நிகழ்ந்துவிட்டது என்ற அச்சம் ஏற்பட்டிருந்தது , இன்னும் சிலர் இங்கே தீவிரவாத தாக்குதல், ரொக்கெட் தாக்குதல் ஏதாவது ஏற்பட்டு உள்ளதோ என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இவ்வாறிருக்கையில் இந்த வெளிச்சத்துக்கான காரணம் வெளியாகியுள்ளது, இங்கிலாந்தில் உணவுக் கழிவுகளை மீள்சுழற்சி செய்யும் ஆலையில் மின்னல் தாக்கியதனாலேயே இந்த வெடிப்பு நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
செவேர்ன் ட்ரெண்ட் கிறீன் பவர் (Severn Trent Green Power) என்ற ஆலையில் மின்னல்தாக்கம் நிகழ்ந்துள்ளதே அங்கே வெளிச்சம் ஏற்பட காரணமாயிற்று.
ஆலையிலுள்ள உயிர்வாயு கொள்கலனில் நேரடியாக மின்னல் தாக்கி கொள்கலன் தீ பிடித்து வெடித்துள்ளது, இந்த அதிர்வினால் அருகிலிருந்த கொள்கலனும் சேர்ந்து வெடித்துள்ளது.
இதனால் அங்கே தொடர் வெடிப்பு நிகழ்ந்து அடுத்தடுத்த இடங்களில் வெடிப்பு நிகழ்ந்து பெரிய வெளிச்சம் ஏற்பட்டுள்ளது.
இதுவே பாரிய வெடிப்பிற்கும், வெளிச்சத்திற்கும் காரணம் என்று கூறப்படுகிறது.
இந்த சம்பவம் இரவு வேளையில் நிகழ்ந்ததனால் அதிஷ்டவசமாக யாரும் மரணிக்கவில்லை என்றும் எந்தவிதமான காயங்களுக்கும் ஆளாக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.