உலகில் முதன் முறையாக டிஜிட்டல் கடவுச்சீட்டு அறிமுகம்
ஸ்மார்ட் போன்களின் செயலி மூலம் செயற்படக்கூடிய டிஜிட்டல் கடவுச்சீட்டினை முதன் முதலாக பின்லாந்து அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
கடல் கடந்த பயணங்களை நவீனமயமாக்குதலையும், பாதுகாப்பினையும் அடிப்படையாக கொண்டே இந்த டிஜிட்டல் கடவுச்சீட்டு திட்டம் முன் மொழியப்பட்டுள்ளது.
அதன்படி டிஜிட்டல் கடவுச்சீட்டினை அறிமுகப்படுத்துவதற்கு திட்டமிட்டிருந்த பின்லாந்து அரசு அதற்காக குழு ஒன்றினையும் அறிமுகப்படுத்தி திட்டத்தினை செயற்படுத்தியிருந்தது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் சில நாடுகள்
அதன்படி, ஃபின்ஏர் (Finnair), ஃபின்னிஸ் காவல்துறை (Finnish police) ,ஃபின்ஏவியா (Finavia) மற்றும் விமான நிலைய செயற்பாட்டாளர்கள் ஆகியோரை உள்ளடக்கிய குழு ஒன்றினை சென்ற மாதம் 28 ஆம் திகதி பின்லாந்து அறிமுகப்படுத்தியிருந்தது.
இவர்களின் முயற்சியின் கீழ் தற்போது உலகில் முதன் முதலாக டிஜிட்டல் கடவுச்சீட்டு பயன்பாடு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அந்தவகையில் இந்த, டிஜிட்டல் கடவுச்சீட்டினை பயன்படுத்தும் முறைமை தற்போது ஐரோப்பிய ஒன்றியத்தின் சில நாடுகளுக்கிடையில் மாத்திரமே மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதிலும் குறிப்பாக ஹெல்சின்கியில் இருந்து இங்கிலாந்து செல்லும் சில ஃபின்ஏர் விமான பயணிகளிடம் மாத்திரமே முதல் கட்டமாக இந்த டிஜிட்டல் கடவுச்சீட்டு முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த டிஜிட்டல் கடவுச்சீட்டினை பயன்படுத்தும் முறையினையும் இந்த குழு தெரிவித்துள்ளது.
அதன்படி, ஃபின் டிசிசி பைலட் (FIN DTC Pilot app) என்ற செயலியை பதிவிறக்கம் செய்து பயணிகள் தங்கள் முக அங்கீகாரம் மற்றும் சுயவிவர தரவுகள் என்பன குறித்த செயலியில் சரியாக பதிவேற்றப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்க வேண்டும்.
நிறைகுறைகளை ஆராய்ந்து
பின்னர், ஃபின்னிஸ் எல்லை காவலருக்கு செயலி மூலம் இந்த தகவல்களை அவர்கள் அனுப்ப வேண்டும்.
டிஜிட்டல் கடவுச்சீட்டு என்பது தொலைபேசி செயலியை அடிப்படையாக கொண்டது என்பதால், பயணிகள் தங்கள் கடவுச்சீட்டு தகவல்களை ஸ்மார்ட்போனில் சேமித்து வைத்து, தேவையான இடங்களில் உடனடியாக பயன்படுத்திக்கொள்ள இந்த முறை உதவுகிறது.
இதனால் தனியாக கடவுச்சீட்டு புத்தகங்களை உடன் எடுத்துச் செல்ல வேண்டிய தேவை அவசியமற்றதாக்கப்படுகிறது.
எளிது, வேகம், பாதுகாப்பு ஆகிய மூன்று முக்கிய அம்சங்களை அடிப்படையாக கொண்ட இந்த டிஜிட்டல் கடவுச்சீட்டு திட்டமானது உத்தியோகபூர்வமாக எதிர்வரும் ஆண்டு (2024) பெப்ரவரி மாதம் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிடையே அறிமுகப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன் பின்னர், இத்திட்டத்தில் உள்ள நிறைகுறைகளை ஆராய்ந்து, நாடு முழுவதும் செயல்படுத்துவது குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் பின்லாந்து தெரிவித்துள்ளது.
ஸ்மார்ட்போன் பயன்பாடு அனைவருக்கும் அவசியமானதாக மாறியுள்ளதால் எதிர்காலத்தில் டிஜிட்டல் கடவுச்சீட்டு எல்லா நாடுகளிலும் பிரபலமாகும் என்றும் கூறப்படுகிறது.