வட்டுக்கோட்டை கொலை: விசாரணைகளை தொடங்கியது மனித உரிமைகள் ஆணைக்குழு
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை இளம் குடும்பஸ்தர் கொலையில் கடற்படையினரின் செயற்பாடுகள் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகம் தனது விசாரணைகளை வெள்ளிக்கிழமை (15) ஆரம்பித்துள்ளது.
வட்டுக்கோட்டை மாவடி பகுதியைச் சேர்ந்த தவச்செல்வம் பவித்திரன் (வயது 23) என்ற குடும்பஸ்தர் குழு ஒன்றினால் கடத்தப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
குறித்த கொலை சம்பவத்திற்கு கடற்படையினரும் ஒரு வகையில் காரணம் என கொலை செய்யப்பட்டவரின் மனைவி குற்றம் சாட்டிய நிலையில் இளைஞனை கடத்துவதற்கு கடற்படையினர் உதவும் காணொளி காட்சிகளும் வெளியாகியிருந்தன.
கடற்படையினர்
இந்நிலையில் அந்த காணொளியில் இளைஞனும் மனைவியும் தஞ்சம் கோரி முகாமுக்கு ஓடி வருவதும் அங்கு கடற்படையினர் அவர்களை தாக்குவதும் மற்றும் வன்முறை கும்பல் கடற்படையின் கண் முன்னே முகாம் பகுதியிலிருந்து கணவன் மனைவியை கடத்தி செல்வதும் பதிவாகியுள்ளது.
கடற்படையினர் துப்பாக்கிகளுடன் கடத்தல்காரர்களுக்கு உதவி செய்வது காணொளியில் தெளிவாக பதிவாகியுள்ள நிலையில் கடத்தலுக்கு கடற்படையினர் உதவினார்களென்ற குற்றச்சாட்டை உயிரிழந்தவரின் மனைவி முன்வைத்துள்ளதுடன் அது தொடர்பில் ஊடகங்களிலும் செய்திகள் வெளிவந்தது.
இவ்வாறு கடற்படையினரின் செயற்பாடுகள் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகம், ஊடகங்களில் வெளியாகிய செய்திகள் மற்றும் காணொளிகளின் அடிப்படையில் தனது சொந்தப் பிரேரணையாக எடுத்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
மனித உரிமைகள்
இந்நிலையில், வெள்ளிக்கிழமை(14) கடற்படை முகாமுக்கு சென்ற மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
குறித்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய இணைப்பாளர் ரி. கனகராஜ் ஊடகங்களில் வெளியாகிய செய்திகள் மற்றும் காணொளிகளின் அடிப்படையில் கடற்படையினரின் செயற்பாடுகள் தொடர்பில் அறிக்கை கேட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமல்லாது குறித்த இளைஞனின் கொலை தொடர்பில் காவல்துறையினர் மேற்கொள்ளப்படும் விசாரணைகள் தொடர்பிலும் விரிவான அறிக்கை கேட்டுள்ளோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |