குற்றமற்றவள் என நிரூபித்து காட்டு... மனைவியை தீக்குளிக்க வைத்த கணவன்!
"நீ குற்றமற்றவள் என நிரூபித்துக் காட்டு" எனக் கூறி, மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி, தீப்பெட்டியைக் கொடுத்து அவரைத் தீக்குளிக்கச் செய்த கணவன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு - முனைக்காடு பகுதியில் நேற்று (17) காலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகக் கொக்கட்டிச்சோலை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து மேலும் தெரியவருகையில், முனைக்காடு நாகதம்பிரான் கோவில் வீதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான 36 வயதுடைய தி. அனுஷ்வரன் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி
குறித்த நபர் அதே பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதான பிரகலாதேவி என்பவரைத் திருமணம் முடித்து வாழ்ந்து வரும் நிலையில் சம்பவ தினத்தன்று காலை கணவன் - மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதன்போது வாய்த்தர்க்கம் முற்றிய நிலையில், கணவன் மனைவியின் நடத்தையில் சந்தேகமுற்று, "நீ குற்றமற்றவள் என்பதை நிரூபித்துக் காட்டு" என வற்புறுத்தியுள்ளார்.
அதன்பின்னர் மனைவியின் உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி, தீப்பெட்டியைக் கொடுத்து அவரே தீ வைக்கத் தூண்டியுள்ளார்.
இதனால் தீப்பற்றி எரிந்த மனைவி படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு, தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நீதவான் முன்னிலையில் நிறுத்துதல்
மனைவியைத் தீக்குளிக்க வைத்த பின்னர், கணவன் தனக்குத் தானே கூரிய ஆயுதத்தால் குத்தி காயப்படுத்திக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து, மனைவியைக் கொலை செய்ய முயன்றமை மற்றும் தன்னைத் தானே காயப்படுத்திக் கொண்டமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் கொக்கட்டிச்சோலை காவல்துறையினர் அவரைக் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரை இன்று (18) நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் இச்சம்பவம் தொடர்பாகக் கொக்கட்டிச்சோலை குற்றத்தடுப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |