தையிட்டி விகாரை காணி விடுவிப்பு - யாழில் ஜனாதிபதிக்கு விகாராதிபதி அழுத்தம்
தையிட்டி விகாரை அமைந்துள்ள பொதுமக்களின் காணிகளை விரைவாக விடுவிக்குமாறு ஜனாதிபதியிடம் தான் வலியுறுத்தியதாக யாழ்ப்பாணம் ஆரியகுளம் ஸ்ரீ நாக விகாரையின் விகாராதிபதி மீகஹஜந்துரே சிறிவிமல நாயக்க தேரர் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் ஆரியகுளம் ஸ்ரீ நாக விகாரைக்கு விஜயம் செய்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, விகாராதிபதியைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.
இச்சந்திப்பு குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
திஸ்ஸ விகாரை பிரச்சினை
அவர் மேலும் கூறுகையில்: "வடக்கு மாகாணத்தில் வாழும் தமிழ் மக்களுக்குப் பல பிரச்சினைகள் காணப்படுகின்றன.

அந்த வகையில் தையிட்டி திஸ்ஸ விகாரை பிரச்சினை குறித்து ஜனாதிபதியிடம் விளக்கமளித்தேன். குறிப்பாக, அங்குள்ள பொதுமக்களின் காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தினேன்.
ஜனாதிபதியும் அதனை ஏற்றுக்கொண்டதாகவே தெரிகிறது. விகாரைக்கு அருகிலுள்ள மக்கள் மற்றும் காணி உரிமையாளர்களுடன் கலந்துரையாடி, இது குறித்து விரைவாக ஒரு தீர்மானத்தை எடுக்க வேண்டும்.
இளைஞர்களின் வேலைவாய்ப்பு
இந்தப் பிரச்சினைக்கும் எனக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை, அது நயினாதீவு நாக விகாரை விகாராதிபதியுடனேயே தொடர்புடையது.

எனினும், பொதுமக்கள் சார்பாகவே இந்தக் கருத்தை நான் முன்வைத்தேன்.
மேலும், இப்பகுதியில் போதைப்பொருள் அச்சுறுத்தல் மற்றும் இளைஞர்களின் வேலைவாய்ப்புப் பிரச்சினைகள் அதிகமாகக் காணப்படுகின்றன.
எனவே, வடக்கு மாகாணத்தில் புதிய தொழிற்சாலைகளை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் ஜனாதிபதியிடம் முன்வைத்தேன்" என்றார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |