அரசியல் இலாபம் தேட பலமற்ற தலைவன் நானல்ல - ஜீவன் தொண்டமான்
அரசியல் இலாபம் தேட பலமற்ற தலைவன் அல்ல நான் என தோட்ட வீடமைப்பு, சமூக உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் (Jeevan Thondaman) தெரிவித்தார்.
இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியின் ஊடாக மலையகப் பகுதிகளில் அமைக்கப்பட்ட இந்திய வீடமைப்பு வீடுகளுக்கான உட்கட்டமைப்பு வசதிகளை பூரணப்படுத்தி அதனை பயனாளிகளுக்கு கையளிப்பதற்கான நிகழ்வு கொட்டகலை சீ.எல்.எப் வளாகத்தில் நேற்று இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கலந்துகொண்டு மக்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
“ கடந்த அரசாங்க காலத்தில் இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியுடன் மலையகத்தில் கட்டியமைக்கப்பட்டுள்ள வீடுகள் பெரும்பாலும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸை சார்ந்த உறுப்பினர்களுக்கு அல்லாது ஏனைய கட்சியைச் சார்ந்தவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளமை ஒழிவு மறைவு அற்ற விடயமாகும்.
நான் அமைச்சுப் பொறுப்பை ஏற்கும் பொழுது இந்திய நிதி உதவியின் ஊடாக மலையகத்தில் நிர்மாணிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ள வீடுகளில் 697 வீடுகள் மாத்திரமே பூரணமாக வழங்கப்பட்டிருந்து. ஏனைய வீடுகள் நீர், மின்சாரம், வீதி அபிவிருத்தி போன்ற உட்கட்டமைப்பு வசதிகள் குறைபாடுகளுடன் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டிருந்தது. இன்னும் பல வீடுகள் பாரிய குறைபாடுகளுடன் காணப்படுவதால் பயனாளிகளுக்கு வழங்கப்படவில்லை.
இவ்வாறு குறைபாடுகளுடன் காணப்பட்ட வீடுகளுக்கான அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளை முழுமைப்படுத்த இந்த அரசாங்கம் எனது அமைச்சுக்கு நிதிகளை வழங்கி தற்பொழுது அபிவிருத்தி பணிகள் பூரணப்படுத்தப்பட்டு வருகின்றது.
இதற்காக, இந்திய மற்றும் இலங்கை அரசாங்கத்திற்கு நான் நன்றி சொல்லக்் கடமைப்பட்டுள்ளேன்.
மலையகத்திற்கு வழங்கப்பட்டுள்ள 4000 வீடுகளில் உட்கட்டமைப்பு வசதிகள், குறைபாடுகள் உள்ள இன்னும் பல வீடுகளுக்கான அபிவிருத்திப் பணிகளை இராஜாங்க அமைச்சர் என்ற வகையில் நானே முன்னெடுப்பேன்.
அதே போன்று ஏனைய 10 ஆயிரம் வீடுகளுக்கான பணிகளை விரைவில் ஆரம்பிப்பேன். தற்பொழுது வீடுகளில் குடியமர்த்தப்பட்டவர்களுக்கு காணி உறுதிப் பத்திரங்களை இவ் ஆண்டு இறுதிக்குள் வழங்கவும் நடவடிக்கை எடுத்துள்ளேன்.
இந்த நிகழ்வினை ஏற்பாடு செய்வதற்கு முன்பாக பலர் அறிக்கை விட்டிருந்தனர். அதில் ஏற்கனவே வழங்கப்பட்ட வீடுகளை வழங்குவதாக சொல்லியிருந்தனர். அது தவறான கூற்று. அப்படியென்றால் அவர்கள் முழுமையாக வீடுகளை கையளித்திருக்க வேண்டும். இந்த அரசாங்கத்தில் எனது அமைச்சின் ஊடாக வீடுகளுக்கான முழு பணிகளும் முன்னெடுக்கப்பட்டு கையளிக்கப்பட்டுள்ளமையை அவர்கள் உணர வேண்டும்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மறைந்த தலைவர் அமரர். ஆறுமுகன் தொண்டமான் கூறிச் சென்ற ஒரு விடயம் தை பிறந்தால் வழி பிறக்கும் என்பதே. அதன் அடிப்படையில் அடுத்த ஆறு மாத காலப்பகுதிக்குள் மலையகத்தில் பல்கலைகழகம் உருவாக்க அடிக்கல் நாட்டப்படும்” என்றார்.