இருப்பவற்றை சுருட்டிக்கொண்டு செல்வதற்கு நான் அரசியலுக்கு வரவில்லை - பழனி திகாம்பரம்
மலையக மக்களுக்கு சேவையாற்றவே நான் அரசியலுக்கு வந்தேன் எனவும் மாறாக இருப்பவற்றை சுருட்டிக்கொண்டு செல்வதற்கு அல்ல என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் (Palani Thigambaram) தெரிவித்துள்ளார்.
ஹட்டன் மல்லியப்பு புருட்ஹில் பகுதியில் ஏற்படுத்தப்பட்ட புதிய வீடமைப்பு திட்டத்திற்கான மின்சாரம் மற்றும் குடிநீர் வழங்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. இந் நிகழ்வில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
எமது பெருந்தோட்ட மக்களை ஒரு சில அரசியல் தலைமைகள் லயத்தில்தான் வாழ வைத்தனர். ஆனால் எனக்கு அமைச்சுப் பதவி கிடைக்கப்பெற்று குறுகிய காலப்பகுதியிலேயே தனி வீடுகள் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இன்றளவிலும் அத்திட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அமைச்சுப் பதவியை சரியாக பயன்படுத்தி, மக்களுக்கு சேவை செய்தேன். அதனால்தான் புதிய சின்னத்தில் போட்டியிட்டபோதும் கூட 83 ஆயிரம் மக்கள் எனக்கு வாக்களித்தனர்.
இனியும் எனது உயிர் இருக்கும்வரை மக்களுக்கு சேவை செய்வேன். நாட்டிலே தற்போது பொருளாதாரப் பிரச்சினைகள் தலைவிரித்தாடுகின்றன. இதற்கு கொரோனா மட்டும் காரணம் அல்ல. இந்த அரசின் முறையற்ற தீர்மானங்களே பிரதான காரணங்களாகும்.
எனவே, நாட்டுக்கும் எமது மலையக மக்களுக்கும் நன்மை பயக்க வேண்டுமானால் ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சி வரவேண்டும்.
சஜித் தலைமையிலான அமைச்சரவையில் நானும் அமைச்சராக இருப்பேன். எமது மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்." என தெரிவித்துள்ளார்.



