ரி20 உலக கிண்ண போட்டி: இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு ஏற்பட்ட நெருக்கடி!
ரி20 உலக கிண்ண போட்டிக்காக சென்ற சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் நிர்க்கதியான நிலைக்கு முகம் கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இலங்கை(Sri lanka), தென் ஆபிரிக்கா மற்றும் அயர்லாந்து வீரர்களே, இவ்வாறான இன்னல்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.
அதாவது, இலங்கை அணியின் வீரர்கள் புளொரிடாவிலிருந்து நியூயோர்க் செல்வதற்கு நீண்ட நேரம் விமான நிலையத்தில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
ரி20 உலக கிண்ண போட்டி
அதன் காரணமாக இலங்கை அணி, வெள்ளிக்கிழமை இரவு 8:00 மணிக்கு நியூயார்க்கிற்கு வர திட்டமிடப்பட்டிருந்த நிலையில் பின்னர் மறுநாள் காலை 5:00 மணியளவில் கடுமையான தாமதத்துடன் சென்றடைந்துள்ளது.
சுமார் ஏழு மணிநேர தாமதத்தினால் இலங்கை அணி பங்கேற்கவிருந்த காலை துடுப்பாட்டப் பயிற்சி போட்டியும் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், இலங்கை வீரர்கள் தங்குவதற்கு வழங்கப்பட்ட ஹோட்டலிலிருந்து மைதானத்திற்கு ஒன்றரை மணித்தியாலங்கள் பயணம் செய்ய வேண்டியிருப்பதாகவும் கூறப்படுகின்றது.
விமான நிலையத்தில் ஏற்பட்ட நெருக்கடி
எனினும் இந்திய அணிக்கு மைதானத்திற்கு அருகாமையில் ஹோட்டல் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. தங்குமிட வசதிகள் மற்றும் போக்குவரத்து தொடர்பில் இலங்கை, தென் ஆபிரிக்கா மற்றும் அயர்லாந்து ஆகிய நாடுகள் சர்வதேச கிரிக்கட் பேரவைக்கு முறைப்பாடு செய்துள்ளன.
நியாயமான முறையில் போட்டியில் பங்குபற்றும் அணிகளின் போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சில அணிகள் ஓய்வின்றி பல இடங்களுக்கு பயணம் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |