இழிவுபடுத்தப்படும் பௌத்த மதம் : சட்ட நடவடிக்கையை கோரும் மகாநாயக்க தேரர்கள்!
பௌத்த மதத்தை இழிவுபடுத்துவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு அதிபர் ரணில் விக்ரமசிங்கவை மகாநாயக்க தேரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மல்வத்து, அஸ்கிரிய, அமரபுர மற்றும் ராமஞ்ஞ பீடம் ஆகியவற்றின் மகாநாயக்க தேரர்களே இவ்வாறு அதிபருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
பௌத்த மதத்தை இழிவுப்படுத்தும் வகையிலான கருத்துக்களை பரப்பி, பௌத்த தத்துவம் மற்றும் கலாச்சார விழுமியங்களுக்கு தீங்கு விளைவிக்கும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு குறித்த கடிதத்தின் மூலம் மகாநாயக்க தேரர்கள் கோரியுள்ளனர்.
பௌத்த மதத்துக்கு எதிரான கருத்துக்கள்
இலங்கையின் மூன்று பௌத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்கள், பௌத்த மதம் தொடர்பான தவறான சித்தாந்தங்களைப் பரப்பும் நடவடிக்கைக்கு எதிராக கண்டனம் வெளியிட்டுள்ளனர்.
இந்த நிலையில், பௌத்த தத்துவத்திற்கும் அதன் கலாச்சார விழுமியங்களுக்கும் தீங்கு விளைவிப்பதாகக் கூறும் ஒழுங்கமைக்கப்பட்ட குழுக்களுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு அவர்கள் கோரியுள்ளனர்.
பௌத்த மதத்தை அழிக்க முற்படும் இவ்வாறான நபர்களின் செயற்பாடுகளை இனியும் வெறும் சம்பவங்களாகக் கருத முடியாது என மகாநாயக்க தேரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
சமூக ஊடகங்கள்
மேலும், சமூக ஊடகங்களில் தவறான கருத்துக்களை பரப்பி பௌத்த சமூகத்தை தவறாக வழிநடத்தி சமூக சீர்கேடுகளை ஏற்படுத்த முயற்சிக்கும் நபர்களுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்துவற்கு தேவையான சட்டங்கள் உடனடியாக தயாரிக்கப்பட வேண்டுமென அவர்கள் அதிபர் ரணில் விக்ரமசிங்கவிடம் கோரியுள்ளனர்.
புத்தசாசனத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் அதனை மேம்படுத்துவதற்கும் அர்ப்பணிப்புடன் செயற்படுமாறும் அவர்கள் கோரியுள்ளனர்.
கடந்த சில நாட்களாக இலங்கையில் இடம்பெற்ற பல சம்பவங்களை அடிப்படையாக கொண்டு இந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |