இஸ்ரேலை சீண்டி ஹவுதி இழைத்த மிகப்பெரிய தவறு: கதிகலங்கும் மத்திய கிழக்கு
ஈரான் (Iran) ஆதரவு பெற்ற யேமனில் உள்ள ஹவுதி அமைப்பின் கட்டமைப்புகள் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாக இஸ்ரேல் பாதுகாப்பு படை (IDF) அறிவித்துள்ளது.
ஹவுதி அமைப்பினால் இஸ்ரேல் (Israel) மீது தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களுக்கு பதிலடியாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதன்போது, யேமன் தலைநகர் சனாவுக்கு அருகிலுள்ள ஹெசியாஸ் மின் உற்பத்தி நிலையமும் மேற்கு கடற்கரையில் உள்ள ஹொடைடா மற்றும் ராஸ் இசா துறைமுகங்களும் தாக்கப்பட்டதாக IDF தெரிவித்துள்ளது.
ஹவுதியின் முக்கிய கட்டமைப்பு
குறித்த மின் உற்பத்தி நிலையமானது, ஹவுதி அமைப்பின் இராணுவ நடவடிக்கைகளில் மைய எரிசக்தி ஆதாரமாக செயற்பட்டு வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, சனாவின் வடக்கே உள்ள ஹார்ஃப் சுஃபியான் மாவட்டத்தில் ஹவுதி தளங்களை அமெரிக்கா தலைமையிலான கூட்டணி தாக்கியதாகக் கூறப்பட்ட சிறிது நேரத்திலேயே இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
ட்ரோன் தாக்குதல்
இந்த நிலையில், நேற்றிரவு இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலுக்கும் ஏமனில் உள்ள ஹவுதி அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
எனினும், ஏமனில் இருந்து இஸ்ரேல் மீது ஏவப்பட்ட மூன்று ட்ரோன்களை இஸ்ரேலிய விமானப்படை வெற்றிகரமாக தடுத்து நிறுத்தியதாகவும், எந்த சேதமோ அல்லது காயமோ ஏற்படவில்லை என்றும் IDF மேலும் தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |