கொரோனா தொற்று தீவிரமடைந்தால் அதற்கு எதிர்க்கட்சி தலைவர் பொறுப்பு கூற வேண்டும் - ரோஹித அபேகுணவர்தன
கொரோனா தாக்கம் கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில் நாடு வழமை நிலைக்கு திரும்பியுள்ளது. ஆனால் ஆசிரியர் -அதிபர் தொழிற்சங்கத்தினரினதும், விவசாயிகளின் போராட்டங்களினாலும் மீண்டும் கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ளதாக துறைமுகம் மற்றும் கப்பற்துறை அபிவிருத்தி அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன (Rohitha Abeygunawardena) தெரிவித்தார்.
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
சுகாதார அறிவுறுத்தல்களுக்கு முரணாக போராட்டங்களை தீவிரப்படுத்தி, எதிர்க்கட்சியினர் 'ஐக்கிய மக்கள் சக்தி' என்ற கொரோனா கொத்தணியை தோற்றுவிக்க முயற்சிக்கிறார்கள்.
கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் தீவிரமடைந்தால் அதற்கு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) பொறுப்பு கூற வேண்டும். சுகாதார சேவைகள் பணிபபாளர் நாயகத்தின் தீர்மானத்திற்கு எதிராக செயற்படும் எதிர்தரப்பினருக்கு எதிராக சட்டநடவடிக்கை முன்னெடுப்பது அவசியமாகும் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் கிராமங்களின் அபிவிருத்தியையும்,தேசிய உற்பத்திகளின் முன்னேற்றத்தையும் அடிப்படையாகக் கொண்டுள்ளது.
வரவு-செலவு திட்டத்தின் 65சதவீத பயன் கிராமங்களை இலக்காகக் கொண்டுள்ளது. கொரோனா தாக்கத்திற்கு மத்தியில் அரசாங்கம் பொறுப்புடன் செயற்படுகிறது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில், 2020 ஆம் ஆண்டு தொடக்கம் கொரோனா தாக்கத்தை எதிர்க் கொண்டுள்ளோம். கொரோனா தாக்கத்தை கருத்திற் கொண்டு பல சந்தர்ப்பங்களில் நாடு முடக்கப்பட்டது அதனால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தாக்கத்திலிருந்து மக்களை பாதுகாப்பதற்கான சுகாதார நடவடிக்கைகளுக்காக அதிக நிதி செலவிடப்பட்டுள்ளது. அத்துடன் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு சந்தர்ப்பங்களில் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளன எனவும் தெரிவித்துள்ளார்.
பொருளாதார பாதிப்புக்களுக்கு மத்தியில் 2022ஆம் ஆண்டுக்கான வரவு-செலவு திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த நெருக்கடியான சூழ்நிலையை முகாமைத்துவம் செய்யும் வகையில் வரவு-செலவு திட்டத்தில் ஒவ்வொரு துறைகளுக்கும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.