மாகாண சபைகள் தேவையா என கேட்கும் பிரதியமைச்சர் : பொங்கியெழுந்த சாணக்கியன்
மாகாணசபை தேர்தல்கள் நடத்துவது குறித்து அரசாங்கத்தின் நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் (Rasamanickam Shanakiyan) தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (19) உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், 'இப்பொழுது நாடாளுமன்றம் இருக்கின்றது, ஜனாதிபதி இருக்கின்றார், அமைச்சரவை இருக்கின்ற நிலையில் மாகாண சபைகள் தேவையா என்று அண்மையில் மீன் பிடித்துறையின் பிரதி அமைச்சர் ஒரு ஊடக சந்திப்பிலே கேட்டிருந்தார்.
அந்தவகையில் மாகாண சபைகளுக்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் உங்களிடம் கேட்கின்றேன். நானும் ஒரு தனிநபர் சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்திருக்கின்றேன்.
பழைய முறையின் படி தேர்தலை நடத்தலாம் என்று நாங்கள் குறிப்பிட்டிருக்கின்றோம். அந்த சட்டமூலத்தை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளுமாக இருந்தால் அரசாங்க சட்டமூலமாக கொண்டுவந்து மிக விரைவாக மாகாண சபை தேர்தலை நடத்தலாம்.
அடுத்த வருடத்தின் ஆரம்ப பகுதியில் தேர்தல் நடத்தப்படும் என்று சபாநாயகர் அறிவித்திருக்கின்றார், கடந்த காலத்தில் பிரதமரும் ஜனாதிபதியும் இந்த வருட இறுதிப் பகுதியில் தேர்தல் நடத்தப்படும் என தெரிவித்தனர்.
வடிகாலமைப்பு சம்மந்தமான ஒரு சிறிய விடயத்தைக் கூட வடக்கு கிழக்கு மாகாணங்களிலே மக்கள் பிரதிநிதிகளால் செய்ய முடியாமல் உள்ளது.
அந்த வகையில் இந்த மாகாண சபை தேர்தலை எப்பொழுது நீங்கள் நடத்தி இந்த வடிகால்களை அமைப்பதற்கு தேவையான அதிகாரங்களை எப்போது வடக்கு கிழக்கு மாகாணங்களின் மக்கள் பிரதிநிதிகளிடம் கையளிப்பீர்கள் என்ற கேள்விக்கான பதிலை வழங்குவதுடன் மாகாண சபை சம்மந்தமான உங்களுடைய நிலைப்பாட்டை தெரிவியுங்கள்“ என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
