எம்.பிக்களுக்கு பாதுகாப்பு வழங்க காவல்துறை மா அதிபர் இணக்கம்
புதிய இணைப்பு
பாதுகாப்பு கோரும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் பாதுகாப்பு வழங்க காவல்துறை மா அதிபர் மற்றும் சபாநாயகர் ஆகியோர் இணக்கம் தெரிவித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானகே தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைக்கு அமைய, உறுப்பினர்களின் பாதுகாப்பு தொடர்பில் கலந்துரையாடுவதற்காக விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று (31) நாடாளுமன்றத்தில் நடைபெற்றது.
இதில் காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரியவும் கலந்துகொண்டிருந்தார். இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.
இதன்போது பாதுகாப்பு கோரும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு வழங்க காவல்துறை மா அதிபருடன் சபாநாயகரும் இணக்கம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரிய (Priyantha Weerasooriya) நாடாளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு குறித்து கலந்துரையாடுவதற்காகவே அவர் இன்று (31) காலை அங்கு வருகை தந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவிடம் (Jagath Wickramaratne) விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் இந்த கலந்துரையாடல் இடம்பெறுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கயந்த கருணாதிலக கோரிக்கை
நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகளைத் தீர்க்க, காவல்துறை மா அதிபருடன் ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்யுமாறு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினருமான கயந்த கருணாதிலக (Gayantha Karunathilleka) சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது, ”அவரை நாடாளுமன்றத்திற்கு அழைக்குமாறு நாங்கள் கோரினோம். அத்தகைய விவாதம் அவசியம் என்று ஐக்கிய மக்கள் சக்தி மட்டுமல்ல, முழு எதிர்க்கட்சியும் நம்புகிறது.
கூட்டத்திற்குத் தேவையான ஏற்பாடுகளை சபாநாயகர் அலுவலகம் விரைவில் செய்யும் என்று எதிர்பார்க்கின்றோம்.
இந்த அரசாங்கத்தின் கீழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இருந்த வழக்கமான பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டது. சபாநாயகர் அலுவலகம் இந்தக் கூட்டத்தை விரைவில் ஏற்பாடு செய்யும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என கயந்த கருணாதிலக அண்மையில் தெரிவித்திருந்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! | 
 
    
                                 
                 
                         
                         
                         
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        