அவரின் இடத்தை நிரப்பப்போவது யார்...!
சி.டி.விக்ரமரத்னவிற்கு காவல்துறை மா அதிபர் பதவிக்கான மேலதிக பணிகளுக்காக வழங்கப்பட்ட 3 மாத சேவை நீடிப்பு இம்மாதம் 9 ஆம் திகதியுடன் நிறைவடைய உள்ளதாக காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.
காவல்துறை மா அதிபருக்கு இதுவரை இரண்டு சேவை நீடிப்பு வழங்கப்பட்டிருந்தது.
இரண்டு சேவை நீடிப்பு
2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இலங்கையின் 35 ஆவது காவல்துறை மா அதிபராக நியமிக்கப்பட்ட சி.டி.விக்ரமரத்ன, மார்ச் 25 ஆம் திகதி ஓய்வுபெறவிருந்த நிலையில், அதிபர் ரணில் விக்ரமசிங்க அவருக்கு முதல் தடவையாக 3 மாத சேவை நீடிப்பு வழங்கியிருந்தார்.

முதல் சேவை நீடிப்பு நிறைவடைந்ததையடுத்து, கடந்த ஜூன் 09-ம் திகதி முதல் மூன்று மாத காலத்திற்கு இரண்டாவது சேவை நீடிப்பு வழங்கப்பட்டது. இந்த சேவை நீடிப்பு இம்மாதம் 9ம் திகதியுடன் முடிவடைகிறது.
எந்த முடிவும் எடுக்கப்படவில்லை
காவல்துறை மா அதிபர் பதவிக்கு மற்றுமொரு அதிகாரி நியமிக்கப்படுவாரா அல்லது சி.டி.விக்ரமரத்னவுக்கு மீண்டும் சேவை நீடிப்பு வழங்கப்படுமா என்பது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர்களான நிலந்த ஜயவர்தன, லலித் பத்தினயன மற்றும் தேஷ்பந்து தென்னகோன் ஆகியோர் 36 ஆவது காவல்துறை மா அதிபராக நியமிக்கப்படுவதற்கு தகுதி பெற்றுள்ளனர்.